தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வள்ளை

வள்ளை
16
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை உருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளை வயல் கவர்பூட்டி,
5
மனை மரம் விறகு ஆகக்
கடி துறை நீர்க் களிறு படீஇ,
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை,
10
துணை வேண்டாச் செரு வென்றி,
புலவு வாள், புலர் சாந்தின்,
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றை, கனிப் பாகல்,
15
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.

399
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி,
5
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை,
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல்,
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன
மெய் களைந்து, இனனொடு விரைஇ,
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்,
10
அழிகளின் படுநர் களி அட வைகின்,
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக்
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்;
15
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து,
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு,
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே,
அறவர் அறவன், மறவர் மறவன்,
20
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன்,
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என,
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி,
வள் பரிந்து கிடந்த.......................மணக்க
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை,
25
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து,
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன்,
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என,
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே
30
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள
இழுமென இழிதரும் அருவி,
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே.
திணை அது; துறை பரிசில் விடை.
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:17:54(இந்திய நேரம்)