தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேப்பம்பூ

வேப்பம்பூ
45
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்;
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;
5
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர்
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே.
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.

338
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,
நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின்,
படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின்,
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன,
5
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் வரினும், தன் தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
10
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று
உணங்கு கலன் ஆழியின் தோன்றும்
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே.
திணையும் துறையும் அவை.
குன்றூர் கிழார் மகனார் பாடியது.

371
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது,
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி,
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து,
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி,
5
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய்
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி,
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப,
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன்,
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி,
10
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப,
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ,
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை,
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி,
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து,
15
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின்,
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை,
20
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும!
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி,
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள்,
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து
25
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என,
உரு கெழு பேய்மகள் அயர,
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே!
திணையும் துறையும் அவை.
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:31:37(இந்திய நேரம்)