தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வரகு

வரகு
34
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
5
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
'காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்
10
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு
15
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து,
20
சான்றோர் செய்த நன்று உண்டாயின்,
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய, பலவே!
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

120
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல்
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து,
பூழி மயங்கப் பல உழுது, வித்தி,
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக்
5
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி,
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி,
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து,
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து,
வாலிதின் விளைந்த புது வரகு அரிய,
10
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக்
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக,
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து,
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு,
15
பெருந்தோள் தாலம் பூசல் மேவர,
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர்
பாடி ஆனாப் பண்பின் பகைவர்
20
ஓடு கழல் கம்பலை கண்ட
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

197
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
5
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
10
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே;
15
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே.
திணையும் துறையும் அவை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

215
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை
5
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன்மன்னே.
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.

321
பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல்
மேந் தோல் களைந்த தீம் கோள் வெள் எள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன்
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன
5
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட,
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும்,
வன் புல வைப்பினதுவே சென்று
தின் பழம் பசீஇ ..........னனோ, பாண!
வாள் வடு விளங்கிய சென்னிச்
10
செரு வெங் குருசில் ஓம்பும் ஊரே.
திணையும் துறையும் அவை.
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

322
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி,
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்,
5
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய
மன்றில் பாயும் வன் புலத்ததுவே
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது.
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண் பணை ஆளும் வேந்தர்க்குக்
10
கண் படை ஈயா வேலோன் ஊரே.
திணையும் துறையும் அவை.
ஆவூர் கிழார் பாடியது.

327
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில் விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
5
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச்
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி,
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே.
திணையும் துறையும் அவை.
..............................................................

328
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த
புன் புலச் சீறூர், நெல் விளையாதே;
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
5
................. டு அமைந்தனனே;
அன்னன் ஆயினும், பாண! நன்றும்
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட....
களவுப் புளி அன்ன விளை....
..............வாடு ஊன் கொழுங் குறை
10
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு,
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு
உண்டு, இனிது இருந்த பின்
... ... ... ... .... ... தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை
15
முயல் வந்து கறிக்கும் முன்றில்,
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.
திணையும் துறையும் அவை.
பங்கு ............................. பாடியது.

333
நீருள் பட்ட மாரிப் பேர் உறை
மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண,
கரும் பிடர்த் தலைய, பெருஞ் செவிக் குறு முயல்
உள் ஊர்க் குறும் புதல் துள்ளுவன உகளும்
5
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்,
'உண்க' என உணரா உயவிற்று ஆயினும்,
தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்;
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
10
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென,
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்,
குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து,
சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர்
வேட்டக் குடிதொறும் கூட்டு
15
.............................................. உடும்பு செய்
பாணி நெடுந் தேர் வல்லரோடு ஊரா,
வம்பு அணி யானை வேந்து தலைவரினும்,
உண்பது மன்னும் அதுவே;
பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே.
திணையும் துறையும் அவை.
.................................................................

335
அடல் அருந் துப்பின்....................
...................குருந்தே முல்லை என்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே,
5
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு,
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,
10
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென,
கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
திணையும் துறையும் அவை.
மாங்குடி கிழார் பாடியது.

384
மென்பாலான் உடன் அணைஇ,
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்;
வன்பாலான் கருங் கால் வரகின்
5
......................................................................................
அம் கண் குறு முயல வெருவ, அயல
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து;
விழவு இன்றாயினும், உழவர் மண்டை
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து;
10
................................................கிணையேம், பெரும!
நெல் என்னா, பொன் என்னா,
கனற்றக் கொண்ட நறவு என்னா,
.....................மனை என்னா, அவை பலவும்
யான் தண்டவும், தான் தண்டான்,
15
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை,
மண் நாணப் புகழ் வேட்டு,
நீர் நாண நெய் வழங்கி,
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை.....
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு
20
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும்,
தின்ற நண் பல் ஊன் தோண்டவும்,
வந்த வைகல் அல்லது,
சென்ற எல்லைச் செலவு அறியேனே.
திணையும் துறையும் அவை.
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

392
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான்,
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான்
பசலை நிலவின் பனி படு விடியல்,
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை
5
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ,
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து,
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இருங் களந்தோறும்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
10
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச்
சென்று யான் நின்றனெனாக, அன்றே,
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை
15
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத்
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ,
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
20
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே.
திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:37:41(இந்திய நேரம்)