தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாய் (ஞமலி)

நாய் (ஞமலி)
33
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்
5
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்,
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
10
பாடுநர் வஞ்சி பாட, படையோர்
தாது எரு மறுகின் பாசறை பொலிய,
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்து கண்டன்ன
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
15
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப,
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின்,
20
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப,
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே.
திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

74
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
5
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து
உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.

205
முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே;
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர்
5
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை,
வெள் வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய்,
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக!
10
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து,
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே.
திணையும் துறையும் அவை.
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:50:05(இந்திய நேரம்)