தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பன்றி (கேழல்)

பன்றி (கேழல்)
152
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
5
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்;
10
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்;
15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒரு கண் பையென இயக்குமின்;
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
20
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி,
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என,
25
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி,
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன்,
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என,
30
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே!
திணை அது; துறை பரிசில் விடை.
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.

168
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,
5
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
10
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்,
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
15
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்
20
பாடுப என்ப பரிசிலர், நாளும்
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

176
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
5
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்,
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர்
10
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல,
காணாது கழிந்த வைகல், காணா
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே.
திணையும் துறையும் அவை.
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

190
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம்
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
5
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள்,
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து,
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
10
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ!
திணையும் துறையும் அவை.
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:52:45(இந்திய நேரம்)