தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோழி (சேவல்,கானக் கோழி கான வாரணம்)

கோழி (சேவல்,கானக் கோழி கான வாரணம்)
28
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
5
பேதைமை அல்லது ஊதியம் இல்' என,
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
10
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே,
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;
15
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின் செல்வம்;
ஆற்றாமை நிற் போற்றாமையே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

52
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து,
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
5
வட புல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி
10
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலி கண் மாறிய பாழ்படு பொதியில்,
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த
15
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக்
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே!
திணையும் துறையும் அவை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

320
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்
5
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,
10
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
15
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே.
திணையும் துறையும் அவை.
வீரை வெளியனார் பாடியது.

326
ஊர் முது வேலிப் பார் நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்ற,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
5
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து,
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும்
அரு மிளை இருக்கையதுவே மனைவியும்,
வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது,
படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின்
10
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை,
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்,
அருஞ் சமம் ததையத் தாக்கி, பெருஞ் சமத்து
அண்ணல் யானை அணிந்த
15
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே.
திணை வாகை; துறை மூதில் முல்லை.
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.

383
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து,
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி,
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி,
5
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து,
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி,
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள,
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
10
கழை படு சொலியின் இழை அணி வாரா,
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண்
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி,
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல,
எற் பெயர்ந்த நோக்கி.....................................
15
.................................................கல் கொண்டு,
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி,
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே;
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி,
நரை முக ஊகமொடு, உகளும், சென................
20
.......................கன்று பல கெழீஇய
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என
ஒருவனை உடையேன்மன்னே, யானே;
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?
திணையும் துறையும் அவை.
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.

395
மென் புலத்து வயல் உழவர்
வன் புலத்துப் பகடு விட்டு,
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்,
5
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி,
புதல் தளவின் பூச் சூடி,
................................................................
...........................அரியலாருந்து;
மனைக் கோழிப் பைம் பயிரின்னே,
10
கானக் கோழிக் கவர் குரலொடு
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து;
வேய் அன்ன மென் தோளால்,
மயில் அன்ன மென் சாயலார்,
கிளி கடியின்னே,
15
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து;
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழுச் சிறப்பின்,
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,
20
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி,
கதிர் நனி செ ...................................... மாலை,
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,
25
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு,
ஆங்கு நின்ற எற்கண்டு,
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான்,
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி,
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப்
30
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு,
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே;
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
35
குள மீனொடும் தாள் புகையினும்,
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி,
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என,
உள்ளதும் இல்லதும் அறியாது,
40
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே!
திணையும் துறையும் அவை.
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.

398
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர,
வகை மாண் நல் இல்........................
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப,
பொய்கைப் பூ முகை மலர, பாணர்
5
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க,
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை,
பரிசிலர் விசையெ
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்,
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப்
10
புலியினம் மடிந்த கல் அளை போல,
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர்,
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி,
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து,
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்!
15
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என
என் வரவு அறீஇ,
சிறிதிற்குப் பெரிது உவந்து,
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத்
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப்
20
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ,
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை,
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி,
யான் உண அருளல் அன்றியும், தான் உண்
மண்டைய கண்ட மான் வறைக் கருனை,
25
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர,
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும்,
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு,
புரையோன் மேனிப் பூத்தசல.......................
முரைசெல அருளியோனே
30
........................யருவிப் பாயல் கோவே.
திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:14:20(இந்திய நேரம்)