தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananuru

புறநானூறு

முகவுரை

புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட தொகுதி ஆதலின், இது 'புறநானூறு' என்று பெயர் பெற்றது.புறம், புறப்பாட்டு, புறம்புநானூறு, என்னும் பெயர்களாலும் இந் நூலை நச்சினார்க்கினியர் முதலியோர்குறித்துள்ளனர்.இதில் அமைந்துள்ள அகவற் பாடல்களின் அடிச் சிறுமை பெருமை எல்லைகள் துணிய இயலாதபடி பாடல்கள் பலவும் சிதைந்துள்ளன. இதனைத்தொகுத்தார், தொகுப்பித்தார்,பற்றிய செய்திகளும் அறியக்கூடவில்லை.

பண்டைத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும்,சமூக வரலாற்றையும், அறிவுறுத்தும் அரிய கருவூலமாக இத் தொகை நூல் உள்ளது. பண்டைக் காலத்து வாழ்ந்த பேரரசர்களையும், சிற்றரசர்களையும், வீரர்களையும், வீரவழிபாட்டு முறைகளையும், பல சமூகப் பழக்க வழக்கங்களையும், எடுத்தியம்பும் நோக்குடைய பாடல்களை இத் தொகுதி ஒன்றில்தான் நாம் பரக்கக் காண இயலும். இந் நூற் பாடல்கள் தோன்றிய காலம் 'தமிழகத்தின் வீரயுகம்' என்று
சிறப்பித்துச் சொல்லத்தக்க பொற்காலமாகும்.

இந் நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 400 பாடல்கள் உள்ளன. நூற்றைம்பது கலியுள் கடவுள் வாழ்த்தும் உட்பட்டிருத்தல் போல, புறப்பொருள் பற்றிய இத்தொகை நூலில் கடவுள் வாழ்த்தும் நூலின் அங்கமாய் அடங்கியுள்ளது. ஆராய்ச்சியாளரில் ஒரு சிலர் கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து 400 பாடல்கள் இதில் இருந்திருத்தல் கூடும் என்று கருதுகின்றனர்.இவற்றுள் 267, 268ஆம் பாடல்கள் முற்றும் மறைந்து போயின. இப் பாடல்களுக்கு உரிய பழைய உரை கூடப் பிரதிகளில் காணப்பெறவில்லை. 266ஆம் பாடலுக்கு மேற்பட்டுள்ள பிற்பகுதிப் பாடல்கள் பலவற்றின் அடி, சீர், முதலியனவும், பாடல்களின் பிற்குறிப்புக்களில் பெரும்பாலனவும், சிதைவுபட்டுள்ளன. இந்தச் சிதைந்த பகுதிகள் புள்ளி நிரை இட்டுப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இத் தொகை பாடிய புலவர் நூற்று ஐம்பத்து அறுவர் ஆவர்.

இதன்கண் அமைந்த செய்யுட்கள் ஏதோ ஒரு வகை இயைபு கருதி முறைப்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என்று ஊகிக்கும் வகையில் சில இயல்புகள் அங்கங்கே தென்படுகின்றன. எனினும், திட்டவட்டமாகக் கூற இயலவில்லை. முதலில் முடி மன்னர் மூவரைப் பற்றிய பாடல்களும், அதன் பின்னர், குறுநில மன்னர், வேளிர், முதலிய சிறப்புடை மக்களைப் பற்றிய பாடல்களும்,போர்ப் பாடல்களும், கையறுநிலை, நடுகல், மகளிர் தீப்பாய்தல், முதலிய போர் நிகழ்ச்சியுடன் இயைபுடைய பாடல்களும் அமைந்துள்ளன. மூவேந்தரைப் பற்றிய பாடல்களில் சேரர், பாண்டியர், சோழர், என்ற வரிசை முறை மாறிமாறி முதற் பதினெட்டுப் பாடல்களில் உள்ளன. பின்னரும், சிறிது இடையிட்டு இவ்வகை யானதொரு முறைவைப்பு உள்ளமையும் சிந்தித்தற்கு  உரியது. அரசர்க்கும் பிறர்க்கும் அறநிலையை எடுத்து உரைக்கும் பாடல்களும், பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றுப் படை, முதலிய ஆற்றுப்படைச் செய்யுட்களும் இடையிடையே உள்ளன. பெரும்பாலான இடங்களில் திணை, துறை, முதலிய அமைப்பில் செய்யுட்களிடையே தொடர்பு காணப்படுகிறது. இந் நூற் பிரதி ஒன்றின் தொடக்கத்தில் 'அறநிலை' என்ற குறிப்பு இருந்ததைக் கொண்டு, இந் நூல் 'அறநிலை', 'பொருள்நிலை', 'இன்பநிலை', என முப்பெரும் பகுதியுடையதாக ஊகிக்கலாம் என டாக்டர் உ.வே. சமிநாதையர் குறித்துள்ளார்.

ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், திணை, துறை, பற்றிய குறிப்புக்களும்,பாடப்பட்டோர்,பாடினோர், பாடப்பெற்ற சூழ்நிலை, இவற்றை விளக்கும் குறிப்புக்களும் உள்ளன. இவற்றுள் திணை, துறை,பற்றிய குறிப்புக்கள் அவ்வப் பாட்டிற்குப் பொருத்தமாக அமைந்தனவல்ல என்று நச்சினாக்கினியர் கருதுகிறார் (தொல். பொருள். புறத். 35). அன்றியும், புறத்திணை இயல் உரையில், இப் புறநானூற்றுப் பாட்டுக்கள் சிலவற்றை வேறு திணை, துறைகளுக்கு உதாரணமாகக் காட்டியதோடு, புறநானூற்றுக் குறிப்பை மறுத்தும் உள்ளனர் (சூ. 5, 8, 21 உரை). ஆனால், பாடினோர் முதலாயினாரைப் பற்றிய குறிப்புக்கள் மறுக்கப்படாமையால், அவை பண்டை வரலாற்றைத் தெரிந்து எழுதிய சிறந்த குறிப்புக்களாகவே கருதத்தக்கன.

இந் நூலின் முதல் 266 பாடல்களுக்கு உரிய பழைய உரை கிடைத்துள்ளது.இவ் உரையாசிரியர்சில பாடல்களுக்கு எழுதியுள்ள விசேட உரைக் குறிப்புக்களிலிருந்து, இவ் உரைக்கும் முந்திய உரை ஒன்று இந் நூலுக்கு இருக்கவேண்டும் என்று தெரியவருகிறது. ஆனால், அந்த மிகப் பழைய உரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்த உரையாசிரியர்களைப் பற்றிய செய்திகளும் தெரியக்கூடவில்லை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:27:54(இந்திய நேரம்)