தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்



 
முன்னுரை

5


தமிழகத்தின் வடவெல்லை திருவேங்கடத்தைக் கடந்து நின்றது.
கேரளரது மலையாளமும், கன்னடரது கன்னடமும்,ஆந்திரரது தெலுங்கும்
பழந் தமிழ்மொழியாமென்பது மொழிநூலறிஞர் பலகாலும் வற்புறுத்துரைத்துப்
போதரும் பெருமொழி. இம்மலையாள முதலியன,வடமொழி முதலிய பிறமொழிக்
கலப்பால் தமிழ்த்தன்மை மாறி, வேற்றுமொழிபோல இயலும் ஒலியும்
பெற்று நிற்கின்றன. அதனால் அம்மொழி பேசுவார், தாம் பழந்தமிழக் குடியின்
வழித் தோன்றல்கள் என்பதை மறந்து வேறுபட வாழ்வுநடாத்தவிழைகின்றனர்.
ஆயினும்,சந்தனக்கோல் குறுகினால் வேப்பங்கோலாகாதவாறுபோல, ஆந்திரரும்,
கன்னடரும் கேரளரும் மொழிவகையிலும் நடைவகையிலும் எத்துணைவேற்றுமை
மேற்கொள்ளினும் உள்ளத்து எண்ண வகையில் தமிழராய் வாழ்வது இனிது
விளங்கித் தோன்றி நிற்கிறது.இவர்களது தொன்மையும் பண்பாடும் இனிது
காண்டற்கண் இப் புறநானூறு முதலிய தொகைநூல்கள் மிகுதியும்
பயன்படுகின்றன.

இனி, இவ் வேற்றுமை யொழிதற்கும், ஆந்திரர் முதலியோர் தமிழரென
ஒன்றுபட்டு வாழ்ந்து சிறத்தற்கும், இவரனைவரும் கூடிய ஒருமையரசியல்
வகுத்து அரசியல் தனியுரிமை வாழ்வுபெற வேண்டுமெனும் முயற்சி ஒருபால்
நிலவுகிறது; நெஞ்சொன்றி ஒற்றுமைப்பட்டு ஒருமையரசியல் வாழ்வு நடாத்தற்கு
மொழியின் வேற்றுமைநிலை தடை செய்தலால், இப்போதுள்ள மொழிவாரியாகப்
பகுப்புண்டு அரசியல் வாழ்வு நடாத்துவது தக்கது எனும் முயற்சி ஒருபால்
நிலவுகிறது. இவ்விருவகை முயற்சிகட்கிடையே, இத் தென்றமிழகத்து அரசியல்
வாழ்வைத் தனி யுரிமையுடன் நிலவவிடாது - பொருணிலை, மொழி, வாணிபம்
முதலிய பல துறையினும் தமிழ் வாழ்வு தனித்தோங்க விடலாகாதெனக் கருதி
ஒடுக்கும் முயற்சி ஒருபால் முனைந்து நிற்கிறது. அரசியல் ஆக்க முயற்சிகளுட்
கலந்து தமிழரசியலிற் பணிபுரிய விரும்புவோர்க்கு இப்புறநானூறு முதலிய
தாகைநூல்களின் அறிவு இன்றியமையாததாகும்.

இதனை யுணரும் இந்நாளைய தமிழகம் தொகைநூல் விரும்பிப்
பயிலுகின்றது. இந்நூற்கண் காணப்படும் எண்ணமும் சொல்லும் பாட்டு வடிவில்
உள்ளன. இப் பாட்டுக்களின் பொருளை விளக்குதற்குப் பழையோர் ஒருவர்
எழுதிய பழையவுரையும் உளது. இவ்வுரை இந்நூன் முழுதிற்கும்
இல்லையாயினும், கிடைத்த அளவில் மிக்க சிறப்புடையதாகவே இருக்கிறது.
எமது இவ் வெளியீடு நூல் முழுதும் உரை பெற்று இரு பகுதிகளாக
வந்துள்ளன.

பாட்டும், அதன் உரையுமாக நிலவும் ஏனைய நூல்களைப் போலவே
இந்நூலின் பாட்டையும் உரையையும் படித்து வருவது இன்றுகாறும் இருந்து
வரும் மரபு. இம்மரபு தமிழறிவு பெரிது பெற்றார்க்கே எளிதாய் இயன்றுவந்தது.
தமிழை ஓரளவு கற்றாரும் இன்றியமையாது படிக்க வேண்டிய
நிலைமையுண்டாய்விட்டமையின், அவர்கட்கும் பயன்படுமாறு இவ் வெளியீடு
வருவதாயிற்று. ஒவ்வொரு பாட்டுக்கும் ஏற்ற முன்னுரையும், உரையில் அரிய
பொருள் கொண்டுநிற்கும் சொற் பொருள்களுக்கும் கருத்துக்களுக்கும்
வேண்டும் விளக்கமும் இவ்வெளியீட்டின் தனிப் பண்பாகும்.

முன்னுரைப் பகுதி, ஒவ்வொரு பாட்டுக்கும் பாடினோர் வரலாறும்
பாடப்பட்டோர் வரலாறும், பாட்டின் கருத்தும் பிறவும் கூறுகிறது.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:30:44(இந்திய நேரம்)