Primary tabs
v
பாட்டு தொகைகளுக்கு உரிய இலக்கண நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்கிறார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர். நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே யாகும். தொல்காப்பியப் புறத்திணை இயல் உரையில் (35).
'தத்தம் புது நூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின், அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டும் என்று உணர்க'
என்று கூறியுள்ளார். எனவே, தொகை நூல்களின் இலக்கிய மரபை உணர்ந்து கொள்ள அகத்தியமும், தொல்காப்பியமும் கருவி நூல்கள் என்பது தெரிய வரும். இவற்றுள், அகத்தியம் இப்பொழுது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தொல்காப்பிய நூல் முற்றும், சிதைவு இன்றி, பல உரையாசிரியர்களின் உரைகளோடு இன்றும் நிலவுகின்றது. தொல்காப்பியப் பயிற்சி பாட்டு தொகைகளை நன்கு உணர்ந்து அனுபவிக்க மிகவும் அவசியமே.
பாட்டும் தொகையும் பாடிய புலவர் பெருமக்களைப் பற்றிய அகராதி முதலிலும் அவர்களால் பாடப்பெற்றவர்களைக் குறித்த அகராதி அதனை அடுத்தும், இத் தொகுதியில் தரப்பெற்றுள்ளன. இவ் அகராதிகளின் அமைப்பு முறை முதலியன பற்றிய செய்திகளை அந்தந்த இடங்களில் தந்துள்ள குறிப்புக்களில் பார்க்கலாம்.
அதன்பின் 'சொல்-தொடர் விளக்கம்', அமைந்துள்ளது. இதுவே இத்தொகுதியின் பெரும்பகுதி. பாட்டிலும், தொகைகளிலும் உள்ள முக்கியமான சொற்களும் சொல் - தொடர்களும் இந்த அகராதியில் இடம் பெற்றுள்ளன. சொற்களுக்குப் பொருள் எழுதுவதில் பொதுக் கொள்கையாக, பாட்டு தொகைகளின் பண்டை உரைகாரர்கள் வழங்கிய பொருள்களை அவ்வாறே தருதல் முறை என்று மேற் கொள்ளப்பெற்றது. இதனால், பல இடங்களில் அவ்வுரைத் தொடர்கள் பண்டைய தமிழ் நடையில் அமைந்து காணப்பெற்றன. இவற்றையும் விளக்கினால் அன்றி, இப்பொழுது யாவராலும் எளிதில் உணர இயலாது என்று தெரிய வந்தது. எனவே, பற்பல இடங்களில் உரைகாரர்களின் பொருளை விளக்கியும் எழுதப் பெற்றது. இம் முறையினால் ஒரு சொல்லின் பரியாயங்களும் ஒரு சில இடங்களில் அமைந்து விடுதல் தவிர்க்க இயலாததாயிற்று. பொது வகையில் நோக்குமிடத்து இந்தச் சொற் பொருளகராதி 'சங்கச் சொற் கோவை' யாய் அமைந்துள்ளது. விரிவான விளக்கங்களோடு கூடிய சங்க நூல் அகராதிக்கு இது ஒரு முதல் முயற்சியாக அமைதல் காணலாம்.
கதைகளையும் வரலாற்றுக் குறிப்புக்களையும் பற்றிய பகுதியில் பாட்டு தொகைகளில் புலவர்களால் எடுத்தாளப் பெற்ற புராண இதிகாச வரலாறுகளும், முடி மன்னர்கள், குறுநில மன்னர்கள், தலைவர்கள், முதலியவர்களைப் பற்றிய சரித வரலாறுகளும் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன.
அடுத்தபடியாக, பழந்தமிழ்ப் பாடல்களிலிருந்து தெரியவரும் மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய குறிப்புக்கள் ஒருங்கு திரட்டி அமைக்கப் பெற்றுள்ளன. இவற்றால் பண்டைய மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல செய்திகள் புலனாகும். இக் குறிப்புக்கள் பழந்தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையை ஆராய்ந்தறியப் பெரிதும் உதவும்.
இதன் பின்னர் உள்ள கட்டுரைப் பகுதியில், சுவையான செய்யுட் பகுதிகள் எண்ணால் குறிக்கப் பெற்றுள்ளன. இவற்றை அந்தந்த நூல்களில் காணலாம். இப் பகுதிகள் கருத்தாழமும் சொல் நயமும் வாய்ந்தவை; மேற்கோளாக எடுத்துக் கூறத்தக்கவை. இவற்றுள் சில உவமைகளாகவும் இருத்தல் கூடும். வேறு பல