தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1


புலவர்கள் அகராதி

'பாட்டு- தொகை'களின் பாடல்களைப் பாடியவர்களுள் பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஐங்குறுநூறு,   கலித்தொகை,  என்னும்  ஐந்து  நூல்களின்  ஆசிரியர்கள்  ஒரு  சிலரே  யாவர். அவர்களை  எளிதில்  கணக்கிட்டுவிடலாம்.  ஆனால்,  நானூறு  நானூறு பாடல்களைக் கொண்ட நற்றிணை,  குறுந்தொகை,  அகநானூறு, புறநானூறு, என்ற நான்கு நூல்களில் வரும் பாடல்களைப் பாடிய  புலவர்களின் பெயர்களைத் தனி அகராதியின்றி அத்துணை எளிதாக அறிய இயலாது. இந் நான்கு  நூல்களிலும்  நூற்றுக்கணக்கான  புலவர்களின்  பெயர்கள் வந்துள்ளன. அகநானூற்றிலும் குறுந்தொகையிலும்   பாடினோர்    தொகை   முறையே  145  என்றும்,  205  என்றும்,  பழங் குறிப்புக்களிலிருந்து  தெரியவருகின்றன.  நற்றிணைக்கும்  புறநானூற்றிற்கும்  இத்தகைய  குறிப்பு இல்லாமையினாலே,  அவற்றை  எண்ணிட்டுத்  திட்டவட்டமாகக் கூறுவதில் கருத்து மாறுபாடுகள் உள்ளன.

உதாரணமாக,  நமது  புதுமுறைப்  பதிப்பு  நற்றிணையில்  பாடினோர்  தொகை  192  என்று தரப்பட்டிருக்கிறது. பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய தமது தமிழ் இலக்கிய  வரலாற்றில் ( History of Tamil Language and Literature p.24)  நற்றிணைப் புலவர்  தொகை  175  என்று   குறித்துள்ளனர். பின்னத்தூர்  நாராயணசாமி  ஐயர்  அவர்களது பதிப்பிலும்   பாடினோர்   வரலாற்றில்   இத் தொகை  175 ஆகவே காணப்படுகிறது. இந்த எண் வேறுபாடு   எதனால்   வந்தது?   ஒரு  சில  புலவர்களின்  பெயர்களில்  அடைமொழி  சிறிது வேறுபட்டமை  கொண்டு அவர்களைத் தனிப் புலவர்களாக நமது புதுமுறைப் பதிப்பு வேறு வேறு குறிப்பிடுகிறது.  அப் புலவர்களை அவர்கள் ஒருவராகக் கொண்டுள்ளனர். உதாரணமாக, மாங்குடி மருதன், மாங்குடி  கிழார், என்னும் இருவர் வெவ்வேறானவர் என்றும், ஈழத்துப்  பூதன்  தேவன், மதுரை  ஈழத்துப்  பூதன் தேவன், என்பவரும் அவ்வாறே வெவ்வேறானவர்  என்றும்  கொண்டு, நமது  புதுமுறைப் பதிப்பில் நால்வராகக் கணக்கிட்டிருக்க, அவர்களை மாங்குடி மருதன், ஈழத்துப் பூதன் தேவன், என்று இருவராகவே பிள்ளை அவர்கள் கொண்டனர்.

மேலும்,  புலவர்  பெயர்களில்  காணும்  பாட வேறுபாடுகளும் புலவர் பெயர்களில் மாறுபாடு தோன்ற  மற்றொரு  காரணமாயுள்ளது.   குறுந்தொகை  79ல்  குடவாயிற் கீரனக்கன் என்பதற்குக் குடவாயிற் கீரத்தனார் என்றும், 131இல் ஓரேருழவர்  என்பதற்கு  நக்கீரர் என்றும், 315இல் மதுரை வேளாதத்தன்   என்பதற்குத்   தும்பிசேர்கீரனார்  என்றும்  பிரதிகளில்  வேறுபாடுகள் உள்ளன. பிள்ளை   அவர்கள்   இப் பிரதி   வேறுபாடுகளையே   மேற்கொண்டிருக்கின்றார். அகநானூறு, குறுந்தொகை, நூற்களில் காணும் பாடினோர் பெயர் பற்றிய பழங் குறிப்புக்களை ஓர் எல்லையாகக் கொண்டு  ஆராய்வதாயின்,   பிள்ளை  அவர்கள் கொண்டது போல, புலவர் பெயர்களில் சிலரை ஒருவராக எண்ணிக் கணக்கிடும்  அவசியம் விளங்கும். இங்ஙனம் நேர்ந்த வேறுபாடுகளினால்தான் புலவர்  பெயர்கள்  பற்றிய  தொகையிலும் மாறுபாடு காணப்படுகிறது. இது மேலும் ஆராய்வதற்கு உரியது.

பேராசிரியர்    எஸ். வையாபுரிப் பிள்ளை   அவர்கள்   கொண்ட   முறை   பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள்   ஒத்துக்கொள்ளும்   அளவில்  உள்ளது.  ஓர் உதாரணம் மாங்குடி கிழார், மாங்குடி   மருதனார்,   இருவரும்   வேறு  வேறானவர்  என்று  நமது  புதுமுறைப்  பதிப்பில் கொள்ளப்பட்டது.  இருவரும்  ஒருவரே  என்பதைப்  புறநானூறு  தெளிவிக்கிறது.  புறநானூற்றில் மாங்குடி கிழார் எனப் பெயர் குறித்த இடத்தில்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:53:55(இந்திய நேரம்)