Primary tabs
2. பொருளிலக்கணத் திரிப்பு
எ - டு : வடநூலுட் போசராசனும்...யாங் கூறுவதின்பச்சுவை யொன்றனையுமே யென இதனையே மிகுத்துக் கூறினான். இது புணர்ச்சி பிரிவென விருவகைப்படும்".
தமிழ் அகப்பொருள் நூல்களும் திருக்குற ளின்பத்துப்பாலும் கூறுவது இன்ப வாழ்க்கையே யன்றி இன்பச்சுவை மட்டுமன்று. இவ்வாழ்க்கை களவு கற்பு என்றே இருவகைப்படும்.
3. ஆரியவழிப் பொருள் கூறல்
எ - டு : "பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற்" படைக் கப்பட்டதோர் கடவுட்சாதி. (குறள்.13 ,உரை.)
4. ஆரியக் கருத்தைப் புகுத்துதல்
எ - டு :"இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு."
(குறள். 545)
"முறைகோடி
மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்."
(குறள். 559)
என்று, உடன்பாட்டு வடிவிலும் எதிர்மறை வடிவிலும் செங்கோலேமழை வருவிக்குமென்று ஆசிரியர் கூறியிருப்பவும், பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும் வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயலொல்லாதென்பதாயிற்று என்று பரிமேலழகர்.
"ஆபயன்
குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்."
என்னுங் குறளுரையில் தலைகீழாய்க் கருமகத்தைக் கரணமாகக் கூறியிருத்தல் காண்க.
5. தென்சொல்லை வடசொன் மொழிபெயர்ப் பெனல்
எ - டு :
'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், அமாத்தியர்
என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின் ( குறள். 631
உரை.). குடங்கர் என்பது குடங்கமென்னும் வட சொற்றிரிபு (830 உரை.)