தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

தமிழர் புறநாகரிகத் துறைகளில் மட்டுமன்றி அகநாகரிகமான பண்பாட்டுத்துறையிலும் மறுமைக்குரிய சமயத்துறையிலும் தலைசிறந்திருந்ததினால், சமயநூலாரும் அறநூலாரும் அறத்திற்கே சிறப்புக்கொடுத்து அறம் பொருளின்பம் எனத்தலைமாற்றிக் கூறினர்.

"அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப" (செய். 105)

என்று தொல்காப்பியமும்,

"அறனும் பொருளும் இன்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்"(28)

"சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல" (31)

என்று புறநானூறுங் கூறுதல் காண்க. அறவழியிற் பொருளையீட்டி அதைக் கொண்டு அறவழியில் இன்பம் நுகர வேண்டுமென்பது கருத்து. இன்பம் என்பது முதற்கண் இவ்வுலக வின்பத்தையும் பின்பு அதனொடு விண்ணுலக வின்பத்தையும் அதன்பின் அவற்றொடு வீட்டுலக வின்பத்தையுங் குறித்தது. இது சமயத்துறை பற்றிய நாகரிக வளர்ச்சியைக் காட்டும். வீட்டின்பம் பலவகையில் ஏனையிரண்டினும் வேறுபட்டதாதலின், பின்னர் அறம் பொருளின்பம் வீடு எனப் பிரித்துக் கூறப்பட்டது. ஆயினும் வீடென்பது அறம் என்னும் வாயில் வகையிலும் காதலின்பம் என்னும் உவமை வகையி லுமன்றி வண்ணனை வகையிற் கூறப்பட வியலாதாதலின், நாற்பொருளும் நூலளவில் என்றும் முப்பாலாகவே இருக்கும். அதனாலேயே திருக்குறட்கும் முப்பால் என்று பெயர். நாற்பொருளும், மாந்தர்க்கு நன்மைசெய்தல் பற்றி உறுதிப் பொருள் என்றும், சிறப்புடைமை பற்றி மாண்பொருள் என்றும் கூறப்படும். கல்வியின் பயன் கடவுள் திருவடியடைதல் என்னுங் கருத்தெழுந்தபின், நாற்பயனே நூற்பயன் என்றாயிற்று.

"அறம்பொரு ளின்பம்வீ டடைதல் நூற்பயனே." 

என்பது நன்னூற்பாயிரம்(10).

அறம், பொருள், இன்பம், வீடு, என்னும் நாற்சொல்லையும், முறையே தர்ம அர்த்த காம மோக்ஷ என மொழிபெயர்த்தனர் வட மொழியாளர். ஆயின், தமிழில் அறம் என்பது நல்வினையையும், வடமொழியில் தர்ம என்பது வருணாச்சிரம தருமம் என்னும் குலவொழுக்கத்தையுமே குறிக்கும்.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:04:20(இந்திய நேரம்)