Primary tabs
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ"
"எந்நன்றி கொன்றார்க்கு
முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)
என்னும் குறளும், காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடிய பாட்டில் ( 278),
"ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே"
என்று 99 - ஆம் குறளிலுள்ள "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்" என்னும் தொடரும், குறிக்கப்பட்டுள்ளமை.
சான்றோன் என்னும் பெயர் அமைந்த ஒழுக்கமுள்ள மறவனையும் (பதிற். 14 : 12) குறித்தலால்,
"செங்களத் துழவுவோள்
சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே".
என்னும் புறப்பாட்டுப் பகுதி, "தன்மகனைச் சான்றோ னெனக் கேட்ட தாய்". என்னுங் குறட்பகுதியொடும் முற்றும் பொருந்துவதே.
(4) கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற திருச்சிற்றம்பலக் கோவை 400 துறைகளும் 25 கிளவித்தொகைகளுங் கொண்டிருக்க திருக்குறட்கோவையாகிய இன்பத்துப்பால் 25 தலைப்பின் கீழ்க் கிளவித்தொகைப் பாகுபாடின்றி 135 துறைகளே கொண்டிருத்தல்.
தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 400 துறைகள் குறிக்கப்பட்டுள. அவற்றுட் சில திருக்கோவையில் இல்லாதன; சில பெயர் குறிக்கப்பெறாதன; சில நுண்வேறுபாடுகளைக் கொண்டன. திருக்கோவைக்குப் பிற்பட்டவற்றில் ஏறத்தாழ 45 துறைகள் கூடியுள்ளன. திருவள்ளுவர் அறநூன்முறையில் ஒருமனை மணம் பற்றிய இன்றியமையாத துறைகளையே கூறினாரேனும், அவற்றின் சுருக்கமும் பெயர் முறையும் திருக்குறளின் முன்மையைத் தெளிவுறக் காட்டுவனவாம்.
(5) திருவள்ளுவரின்
பிற்காலத் தொழிலாகத் தெரிகின்ற நெசவிற்கு
நூலுதவினதாகச் சொல்லப்பெறும் ஏலேலசிங்கர்
என்னும் சோணாட்டுக் கடல் வணிகர் காலம் கி. மு.
இரண்டாம் நூற்றாண்டா யிருந்தமை.