தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

"பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் 
தெப்பானூ லோர்க்குந் துணிவு."

என்று திருக்குறள் பல்துறை நூல்களையுஞ் சுட்டுவதாலும்,

"இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்
தோலென மொழிப தொன்மொழிப் புலவர்." (1945)

என்றுந் தொல்காப்பிய நூற்பா கி. மு ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட அறம்பொருளின்ப வீட்டு நூல்களைக் குறிப்பதாலும்,

"மாரணம் பொருள் என்றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள."

என்று ஒரு பழந்தனிச் செய்யுள் கூறுவதாலும்,

திருவள்ளுவர் வேந்தர்க்கு உள்படுகருமத் தலைவராயிருந்ததாகத் தெரிவதனாலும், அவர் திருக்குறள் இயற்றியதற்கு வடநூற்றுணை எத்துணையும் வேண்டியதாயிருந்ததில்லையென, அவர் நூலை வழிநூலென்பார் மறுக்க.

முழுநிறைவு :

அறம்பொருளின்பம் வீடென்னும் நாற்பொருளையும் பற்றி விளக்கமாகக் கூறுவதனாலும், ஒவ்வோர் அதிகாரத்திலும் அததற்குரிய பொருளைப் பற்றிய எல்லாக் கருத்துக்களையுங் கொண்டிருப்பதனாலும், திருக்குறள் முழுநிறைவான நூலாகும்.

"அகரமுதல" என்று தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்தில் தொடங்கி "முயங்கப் பெறின்" என்று அதன் இறுதியெழுத்தில் முடிந்திருப்பதும், திருக்குறளின் முழுநிறைவைக் காட்டும்.

"ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ 
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்."   (திருவள்ளுவமாலை)

உலகப் பொதுமை :

திருக்குறள் தமிழ்நாட்டிற்கு மட்டுமன்றி உலக முழுமைக்கும் ஒத்ததென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததே. இதுபற்றியே "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடினார் பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும்.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:07:30(இந்திய நேரம்)