தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

அமர் அம்முதல் பொருந்துதல். அம்-அமர் அமர்தல்=பொருந்துதல். அமர்=பொருந்திச் செய்யும் போர். ஒ. நோ: பொருதல்=பொருந்துதல், போர் செய்தல். அமர்த்தல்=போர் செய்தல், வலிமை கொள்ளுதல், செருக்குதல். அம்-சம்-சமம் (போர்)-சமர்-சமரம்-ஸமர (வ.)

அமரகம் அமர் போர். அகம் இடம். அமரகம் போர்க்களம்.

அமிழ்தம் 61-ஆம் 64-ஆம் குறளுரைகளைப் பார்க்க.

அமைச்சு அமைத்தல்=பொருத்துதல், ஏற்பாடு செய்தல். அமை-அமைச்சு=அரசியல் முறையையும் வினைகளையும் செவ்வையாக அமைத்தல். 'சு' தொழிற்பெயரீறு, ஓ. நோ; விழை-விழைச்சு அமைச்சு- அமைச்சன், வேந்தன் என்னும் பெயர் வேந்து என்று குறுகுவது போல, அமைச்சன் என்னும் பெயரும் அமைச்சு என்று குறுகி வழங்கும்.

இனி, அண்மையிலிருப்பவன் என்று பொருள்படும் அமாத்ய என்னும் வடசொல்லொடு தொடர்புடையதாகக் கொள்ளினும், அப்பொருளிலும் இச்சொல் தென்சொல்லாதற்கு எத்துணையும் இழுக்கில்லை யென்க. அமைதல் நெருங்குதல், அமை நெருக்கம். அமை அமைச்சன், ஒ.நோ; தலை-தலைச்சன், உழையிருந்தான் என்று திருவள்ளுவருங் கூறுதல் காண்க (938), அமைச்சன்-அமாத்ய(வ.)

அரங்கு அர்-அறு, அர்-அரை-அறுக்கப்பட்ட பகுதி (-பாதி), அர்-அரங்கு=அறுக்கப்பட்ட அறை, அறைவகுக்கப் பட்ட பாண்டி (சில்லாக்கு) விளையாட்டுக்கட்டம், சூதாட்டுக் கட்டம்.

அரங்கு-அரங்கம்-ரங்க(வ.)

104 ஆம் குறளுரையைப் பார்க்க.

அரசு உரம்-உரவு=வலிமை. உரவு-அரவு-அரசு=வலிமை,ஆளும் வலிமை.

ஒ.நோ: உகை-அகை, பரவு-பரசு.

அரசு-அரசன்=ஆள்வோன். வேந்தன் என்பது வேந்து என்றும், மன்னன் என்பது மன் என்றும், கோவன்(கோன்) என்பது கோ என்றும், குறும்பன் என்பது குறும்பு என்றும், குறுகிவழங்குவது போல், அரசன் என்பதும் அரசு என்று பாலீறு குன்றி வழங்கும். அரசன்-ராஜன் (வ.) L. rex, regis.

வடவர் ரஜ் என்றொரு செயற்கை முதனிலையைத் தோற்றுவித்து, அதற்கு ஒளிதற் பொருள் கூறி உலகை ஏமாற்றுவர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:10:43(இந்திய நேரம்)