தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

கோவூர் கிழார்

38.அறமுத னான்கு மகலிடத்தேச ரெல்லாந்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பான்முறைநே ரொவ்வாதே
முன்னை முதுவோர் மொழி.

(பொ-ரை.) நாற்பொருளையும் மக்கள் ஆய்ந்து தெளிதற்பொருட்டுத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்கு முந்துநூல் ஒன்றும் நிகராகாது.

உறையூர் முதுகூற்றனார்

39. தேவிற் சிறந்த திருவள்ளுவர் குறள்வெண்
பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார்- நாவிற்
குயலில்லை சொற்சுவை யோர்வில்லை மற்றுஞ்
செயலில்லை யென்னுந் திரு.

(பொ-ரை.) தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் திருக்குறளை ஓதாதவரின் நாவிற்கு இன்சொற் சொலவில்லை; உடம்பிற்கு நல்வினையில்லை என்று கருதித் திருமகள் அவரிடஞ் சேரான்.

இழிகட் பெருங்கண்ணனார்

40.இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ்
செம்மை நெறியிற் றெளிவுபெற - மும்மையின்
வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடின ரின்குறள்வெண் பா.

(பொ-ரை.) இம்மை மறுமைக்கும் எழுபிறப்பிற்கும் பயன்படவும் நாற்பொருளும் நடைபெறவும், திருவள்ளுவர் திருக்குறளியற்றினர்.

செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்

41.ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத் - தேவர்
திருவள் ளுவர்தாமுஞ் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம் பூண்டார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:15:46(இந்திய நேரம்)