தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Inna Narpathu


இதில் நீதிகளல்லாமல், சிற்சில மக்களியற்கை முதலியவும் கூறப்பட்டுள. ஒரே கருத்துப் பலவிடத்தில் வெல்வேறு தொடர்களாற் கூறப்பட்டு மிருக்கிறது. இதிலுள்ள ‘இன்னா' என்னுஞ் சொற்குயாண்டும் துன்பம் என்றே பொருள் கூறிவந்திருப்பினும், சிலவிடத்து ‘இனிமையன்று' எனவும், சிலவிடத்துத் ‘தகுதியன்று' எனவும் இங்ஙனமாக ஏற்றபெற்றி கருத்துக் கொள்ளவேண்டும். கள்ளுண்டல், கவறாடல், ஊனுண்டல் என்பன இதிற் கடியப்பட்டுள்ளன. இந்நூலில் வந்துள்ள ‘ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா, ‘குழவிகளுற்ற பிணியின்னா', ‘கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா' என்னுந் தொடர்களோடு, இனியவை நாற்பதில் வந்துள்ள ‘ஊனைத்தின்றூனைப் பெருக்காமை முன்னினிதே,' ‘குழவி பிணியின்றி வாழ்தலினிதே', ‘கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே' என்னுந் தொடர்கள் ஒற்றுமை யுறுதல் காண்க.

இந்நூற்குப் பழைய பொழிப்புரை யொன்றுளது. சின்னாளின் முன்புஞ் சிலர் உரை யெழுதி வெளிப்படுத்தி யிருக்கின்றனர். நம் தமிழன்னைக்கு அரிய தொண்டுகள் பல ஆற்றிப் போற்றிவரும் திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் விரும்பியவாறு இப் புதியவுரை பலமேற்கோளுடன் என்னால் எழுதப்பெறுவதாயிற்று. பல சுவடிகள் பார்த்துப் பாட வேற்றுமையும் காட்டப்பெற்றுள்ளது. இதிற் காணப்படும் குற்றங்குறைகளைப் பொறுத்தருளி எனக்கு ஊக்கமளிக்குமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன்.

"ஞால நின்புக ழேமிக வேண்டும்தென்
னால வாயி லுறையுமெம் மாதியே."

இங்ஙனம்
ந. மு. வேங்கடசாமி.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:32:35(இந்திய நேரம்)