தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 
இன்னா நாற்பது

முகவுரை

நாற்பது என்னும் எண்தொகையால் குறிக்கப்பெறும் நான்கு நூல்கள் கீழ்க்கணக்கில் உள்ளன. அவற்றுள் கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் என்னும் பொருள் பற்றிப் பாடப்பெற்றவை. எஞ்சிய இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ் இரண்டும் முறையேதுன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலுங்கூட, 'இன்னா', 'இனிதே'என்னும் சொற்கள் அமைந்துள்ளன.

நானாற்பது குறித்து இலக்கண விளக்கப்பாட்டியலில்,

காலம் இடம் பொருள் கருதி நாற்பான்
சால உரைத்தல் நானாற்பதுவே (91)

என்னும் ஒரு சூத்திரம் உளது. இதன் உரையில், 'காலம்பற்றி வருவது கார் நாற்பது ; இடம் பற்றி வருவது களவழி நாற்பது ; பொருள் பற்றி வருவன இன்னா நாற்பது இனியநாற்பதாம். இன்னலாக்குதலை இன்னா என்றும், இனிமையாக்குதலை இனிய என்றும் கூறினார்' என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. தண்டியலங்கார உரையிலும் (5) இடம் பற்றியும் காலம்பற்றியும் தொகுத்த நூல்களுக்குக் களவழிநாற்பதும், கார் நாற்பதும் உதாரணமாகக் காட்டப்பெற்றுள்ளன.

வீர சோழிய உரைகாரர்நால் - நாற்பது நூல்களைப் 'பின் மொழி எண் தொகை' என்பர். அவர் உரைப் பகுதி வருமாறு:

'இன்னா என்னும் சொல்லினையுடைய நாற்பது கவியாதொரு நூலின் உண்டு, அந்நூல் இன்னாநாற்பது எனவும், இவ்வண்ணம் இனிய நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது எனவும் வருவன பின் மொழிகள்எண் மொழிகள் ஆதலால், பின்மொழி எண்தொகை.' இவ்உரைகாரர் இன்னா நாற்பதை முதலில் கூறி, அதன்பெயர்க்கு விளக்கம் கூறுதலின், இது இனியவை நாற்பதிற்கு முன்னர்த் தோன்றியது என்று கருதலாம். ஏட்டுப் பிரதிகளில் இன்னா நாற்பதின் பின்னரே இனியவை நாற்பது எழுதப்பெற்றிருத்தலும் இக் கருத்தை ஒரு வகையில் வலியுறுத்துகின்றது.

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. நூல்அமைப்பில் இனியவை நாற்பதினும் இது செவ்வியமுறையை மேற்கொண்டுள்ளது எனலாம். ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளைக்கொண்டு நான்மணிக்கடிகையைப் போன்று இந் நூல் அமைந்த போதிலும், ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின், இது 'இன்னா நாற்பது' என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது. சிற்சில பொருள்களை இவ்வாசிரியர் மீண்டும் எடுத்துக் கூறுதல் அந்தஅறங்களை வற்புறுத்தி உணர்த்துதற் பொருட்டேயாதல் வேண்டும்.

இந் நூலை இயற்றியவர் கபில தேவர். தமிழுலகில் கபிலர் என்ற பெயருடையார் பலர் உள்ளனர். இவர்களில் முக்கியமாக ஐவரைக் குறிப்பிடலாம். முதலாமவராகக் கூறத்தக்கவர் சங்க காலத்தில் பாரிக்கு உற்ற நண்பராய் விளங்கிய அந்தணராகியகபிலர். இவருக்குப்பின் கூறத்தக்கவர் இன்னாநாற்பது செய்த பிற்சான்றோராகிய கபிலர். அடுத்து, பதினோராந் திருமுறையில் வரும் கபிலதேவ நாயனார்
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:32:44(இந்திய நேரம்)