Primary tabs
பேரன்புடையவனான சேரமானது பதியாதல் குறித்து அங்ஙனம் கூறினாரெனினும் அமையும்.
களவழி நாற்பது என்னும் இந்நூல் செங்கட்சோழரது போர்க்கள வென்றியைத் தனித்தெடுத்துக் கூறுதற் கெழுந்தது. ‘கூதிர்வேனில்' என்னும் புறத்திணையியற் சூத்திரத்து ‘ஏரோர் களவழி யன்றிக் களவழித்-தேரோர் தோற்றிய வென்றியும்' என்பதனால் களவழி இருவகைப்படும் என்க. இவற்றுள் முன்னது, உழுதொழிலாளர் விளையுட்காலத்துக் களத்தின்கட் செய்யுஞ் செய்கை; என்றது, நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரிதிரித்துச் சுற்றத்தோடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலர் முகந்துகொள்ள வரிசையின் அளிப்பது. பின்னது, அரசர் போர்க்களத்துச் செய்யுஞ் செய்கை; என்றது நாற்படையுங் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாண்மடலோச்சி அதரிதிரித்து...... அட்ட கூழ்ப்பலியைப் பலிகொடுத்து எஞ்சி நின்ற யானை குதிரைகளையும், ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்து கொள்ளக் கொடுத்தல். களவழி-களத்தினிடம், களத்திடத்து நிகழ்ச்சியைப் பாடும் செய்யுளைக் களவழி என்றது ஆகுபெயர். பிற்கூறிய களவழிச் செய்யுளைப் புலவர் தேரேறி வந்து பாடுவரென்ப. இவ்வாற்றல் இதன் இலக்கணம் ஓர்ந்து கொள்க.
இந்நூலின்கண்ணே யானைப்போர் மிகுத்துக் கூறப்படுகின்றது. திருக்கார்த்திகைத் திருவிழா குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலானது சொற்செறிவும், பொருட் பொலிவும் வாய்ந்த பாக்களாலாயது. பழைய உரையாசிரியர்களால் தொல்காப்பியவுரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பெற்ற பெருமை யினையுடையது. இதிலுள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் பொருட்கேற்ற பெற்றி இவ்வாசிரியர்அமைத்திருக்கும் உவமைகள் கற்போர்க்குக் கழிபேரின்பம் விளைப்பன.
இந்நூற்குப் பழையவுரை யொன்றுண்டு. அது செய்யுட் பொருளைப் பொழிப்பாக வெடுத்துரைப்பது; விசேடக் குறிப்புயாதும் கொண்டிராதது. மற்ற இதற்குச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரவர்களால் பதப்பொருளும், இலக்கணக் குறிப்புகளுமாக எழுதப்பெற்ற உரையொன்றுண்டு. அதிலுள்ள இலக்கணக்குறிப்புகள் பெரும்பாலும் இக்காலத்துக் வேண்டப் பெறாதன வாயும், வழுவுள்ளனவாயும் தோன்றின; பதப்பொருளும் பலவிடத்துத் தவறான பாடத்தின்மே லெழுந்தும், மூலத்தொடு மாறுபட்டும் வழுவியிருந்தமை புலானாயிற்று. இவ்வேதுக்களாற்றான் நல்லிசைப் புலவர் செய்யுட்கு உரைகாணுந்திறன் ஒரு சிறிதும்