Primary tabs
களவழி நாற்பது
முகவுரை
களவழி நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாராகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க்கணக்குகள் குறிக்கப்பட வில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, என எண்ணி வருகின்றனர். கீழ்க்கணக் கியற்றியோருட் கபிலர், கண்ணஞ்சேந்தனார், கூடலூர் கிழார், பொய்கையார் முதலாயினார் சங்கத்ததுச் சான்றோரென்பது ஒருதலையாகலின், அவற்றுட் பலவும் அக்காலத்தின வென்பதில் இழுக்கொன்று மின்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட்டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில்,
‘வனப்பியல்
தானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியாற் றாய பனுவலோ
டம்மை தானே யடிநிமிர் பின்றே'
என்னுஞ் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றான் அறியப்படுவது. அவை அம்மை யென்னும் வனப்புடைய வாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக் கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத்தின ராவர்.
‘அடிநிமிர்
பில்லாச் செய்யுட் டொகுதி
யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத்
திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்'
என்பது பன்னிருபாட்டியல்,
கீழ்க்கணக்கு நூல் பதினெட்டாவன; நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, என்பன. இதனை,