Primary tabs
"சிறுகா பெறுகாமுறை பிறழ்ந்து வாரா" (நாலடி 110) என்பதனானும் உணர்க' என்று குறித்துள்ளனர். இவற்றால் நாலடியார்சைன சமயச் சான்றோர் பலர் பாடிய பாடல்களின் தொகுதிஎன்பது போதரும்.
நாலடியார்ப் பிரதிகள் சிலவற்றில் காணும் 'வளம் கெழு திருவொடு' எனத் தொடங்கும் பாடலிலிருந்து, நாலடிநூலுக்கு அதிகாரம் வகுத்தவர் 'பதுமனார்' என்பதும், இவ்வதிகாரங்களை முப்பாலுக்கும் அடைவுபடுத்தி உரை கண்டவர் 'தருமர்' என்பதும் தெரியவருகின்றன. பதுமனார், திருக்குறள் நூலைப் போன்று அதிகாரத்திற்குப் பப்பத்துப்பாடல்களாக அமைத்து, நூலை உருவாக்கியிருக்கிறார். நூலுக்குப் புறம்பாக முதற்கண் உள்ளகடவுள் வாழ்த்துப் பாடல் நீங்கலாக, இதன்கண் 40 அதிகாரங்களும் 400 பாடல்களும்உள்ளன. பின்னர், பாலும் இயலும் வகுத்த உரையாசிரியர்கள், அறத்துப்பால், பொருட் பால், காமத்துப் பால் என முப்பாலாகப்பகுத்து, இயல் பாகுபாடுகளும் செய்திருக்கின்றனர். பொருட்பாலில் பொது இயல், பல் நெறி இயல் என்பனஓர் அதிகாரமே ஓர் இயலாகக் குறிக்கப்படுபவை. தருமர்இறுதி மூன்று அதிகாரங்களையும் காமத்துப்பால் எனக் கொண்டு, 'பொதுமகளிர்' என்னும் ஓர் அதிகாரத்தை (38) 'இன்ப துன்பஇயல்' என்றும், ஏனை இரண்டு அதிகாரங்களையும்(39, 40) 'இன்ப இயல்' என்றும் கொள்வர்.வேறு சில உரைகாரர் இறுதி அதிகாரமாகிய 'காமம் நுதல் இயல்' ஒன்றை மட்டுமேகாமத்துப் பாலுக்கு உரியதாகக் கொண்டுள்ளனர். ஓர் அதிகாரமே இயல்களாக அமைந்துள்ளமையும், ஓர் அதிகாரம் இயலாகவும் 'பால்' எனப்படும் பெரும் பிரிவாகவும் அமைந்துள்ளமையும் சிந்திக்கின், இந்தப் பால், இயல் பகுப்பு சிறந்த அமைப்பு முறையாகத் தோன்றவில்லை. காமத்துப் பாலின் இன்ப இயல் பாடல்களுக்குத் துறைக்குறிப்புகளும் உரைகளில் காணப்படுகின்றன.
இந்நூல் பாடல்களில் ஆடூஉ முன்னிலை(52) அதிகமாகவும், மகடூஉ முன்னிலை (6) மிகக் குறைவாகவும் வந்துள்ளன. 'பூங்குன்றநாட!' என வரும் விளித்தொடர் நூலகத்து இரண்டு இடங்களில் (128, 212)வருவது கொண்டு, பூங்குன்ற நாட்டுத் தலைவனைக் குறித்ததாக எண்ணுவோரும் உண்டு. ஆனால், இவையும் ஏனைய ஆடூஉ முன்னிலைத் தொடர்களைப் போலப்பொது வகையில் அமைந்தவை என்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.
ஆனால், 'முத்தரையர்' என்ற அரசபரம்பரையினரைக் குறித்த செய்திகள் இரண்டு பாடல்களில் (200, 296)உள்ளன. இம் முத்தரையர் வரலாற்றொடு இயைபுபட்டவர் என்றும், இவர்கள்காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாதல் வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். எனவே, நாலடி நானூறும் இக்காலத்தைச் சார்ந்ததாதல் கூடும்.
இந் நூலைத் தொகுத்து முறைப்படுத்தியபதுமனாரே இதற்கு ஓர் உரையும் வகுத்தார் என்பது தெரியவருகிறது. மதிவரர் என்பவர் இந் நூற்கு அரும் பதவுரை இயற்றினார் என்பதும், தருமர் என்பவர் உரை எழுதினார் என்பதும் தனிப்பாடல்களால் தெரியவருகின்றன. இந்நூலினை இளம்பூரணர் முதலிய தொல்காப்பிய உரைகாரரும் பரிமேலழகரும் அடியார்க்கு நல்லாரும் தம்தம்உரைகளில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.