தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thinaimalai Nootri Iympathu


திணைமாலை நூற்றைம்பது

கீழ்க்கணக்கு வரிசையில் அகப்பொருள் நூல்கள் ஆறு. அவற்றுள் இரண்டு நூல்கள் 'திணை' என்றும், வேறு இரண்டு 'ஐந்திணை' என்றும் பெயர் பெறுவன. இவற்றை 'நால் ஐந்திணை' என்றும் குறிப்பர். இந் நூல்கள் நற்றிணை நானூறு, அகநானூறு என வரும் சங்க நூல்களை ஒப்ப, பாடல்-தொகை அளவையும் உடன் கூட்டி வழங்கப் பெறுகின்றன.

திணை என்பது நிலம், ஒழுக்கம் முதலிய பலபொருள் படுவதோர் சொல். இங்கே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலம் பற்றி, அவ்வந்நிலத்திற்குரிய புணர்தல், பிரிதல், முதலிய ஒழுக்கங்கள் சிறப்பித்துப் பாடப் பெறுகின்றன. எனவே, இவற்றைத் 'திணை' என்றும், 'ஐந்திணை' என்றும் குறித்துள்ளனர்.

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையின் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந் நூல்பெயர் பெற்றுள்ளது. கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம், என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. நூற்றைம்பது என்னும் எண்வரையறைக்கு ஏற்ப, திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டிருத்தலே முறை. அங்ஙனமாகவும், குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. இதனால், இந் நூலுள் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மிகுதியான மூன்று பாடல்களுக்கும் பழைய உரை உள்ளது. எனவே, உரைகாரர் காலத்திற்கு முன்பே இப் பாடல்கள் நூலகத்து உள்ளமை தெளிவு. ஏனைய திணைமொழி ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது என்னும் நூல்கள் எல்லாம் குறித்தபாடல் அளவுக்கு விஞ்சாமல் அமைவுற்றிருக்க, இந் நூலில் மட்டும் மூன்று பாடல்கள் மிகுதியாகக் காணப்பெறுதல் ஐயுறத் தக்கது ஒன்றே.

இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியாரே. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதும், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பதும், பிறவும் ஏலாதி முகவுரையில் காணலாகும். 'கோடாப் புகழ் மாறன் கூடல் அனையாள்' (4)என்று கூறுதலின், இவர் பாண்டியனிடத்தும், அவன் கோநகரமாகிய கூடலிடத்தும் ஈடுபாடுள்ளவர் என்று கருதலாம். கணிமேதாவியார் என்ற பெயருக்கு ஏற்ப, நல்ல நாள் நோக்கி வினைபுரிதலை இந் நூலுள் பல இடங்களில் (46, 52, 54) கூறியுள்ளமை நோக்கத்தக்கது.

இவர் கடலுக்கும் கானல் சேர் வெண் மணலுக்கும் மாயவனையும் பலராமனையும் உவமை கூறுவர்.

மாயவனும் தம்முனும் போலே, மறிகடலும்
கானலும் சேர் வெண் மணலும் காணாயோ? (58)

என இவர் கூறிய கருத்தை ஒத்த வருணனைகள் பிற நூல்களிலும் காணப்படுகின்றன. இருளுக்கும் நிலவுக்கும் மாயவனையும் பலராமனையும் இந் நூலகத்து வேறோர் இடத்தும் உவமைகாட்டுதல் (96, 97) காணலாம்.

இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்:
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண் (123)

என்ற கருத்து, 'செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே' (7: 35 : 4) என்னும் சுந்தரர்தேவாரப் பகுதியோடு ஒத்துள்ளது.

வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன் ; கண்டாளாம்,
தண்சுடர் அன்னாளைத் தான் (89)

என்ற இந் நூற் கருத்தை அடியொற்றியே,


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:07:31(இந்திய நேரம்)