Primary tabs
ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டுபங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு, என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதிநூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையான அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர்மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது.
ஏலாதியின் தன்மை குறித்துத் தமிழ்நூல்களில் விளக்கம் காணப்படவில்லை. வட மொழியில்,'ஏலாதி கிருதம், ஏலாதி சூர்ணம், ஏலாதி கணம்' எனமூவகை ஏலாதிகள் பேசப் பெறுகின்றன. இவற்றுள் ஏலாதிசூர்ணம் என்பதுவே இந் நூல் பொருளுக்கு மிகவும் இயைந்ததாகும்.
மருந்துப் பெயர் பெற்ற கீழ்க்கணக்கு நூல்கள் மூன்றனுள் ஏலாதி சிறுபஞ்ச மூலத்தோடு பெரிதும் ஒற்றுமையுடையது. சிறுபஞ்சமூலம் ஐந்து பொருள்களை உரைக்க, இது ஆறு பொருள்களைச் சுட்டுகின்றது. மேலும், சிறுபஞ்சமூலத்தின் கருத்துச் சொற்பொருள்களை இந்நூல் பல இடங்களில் அடியொற்றியுள்ளது. இரு நூல்களின் ஆசிரியரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர். இருவரும் மாக்காயனார் என்பவரிடம் தமிழ் ஓதியவரே. வட சொல்லாட்சி சிறுபஞ்சமூலத்தைப் போன்றே இந் நூலிலும் சற்றுமிகுதியே.
இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.கணிமேதை என்றும் இவர் வழங்கப் பெறுவர். கணிமேதை என்பது கொண்டு சோதிட நூற் புலமை மிக்கார் இவர்என்று கொள்வாரும் உண்டு. நூலின் முதற்கண் அருகக்கடவுளுக்கு இவர் வாழ்த்துக் கூறியுள்ளமையினாலும், நூலுள் சமண சமயத்தின் சிறப்பு அறங்கள் சுட்டப்பெறுதலினாலும், இவரைச் சைன சமயத்தவர் என்று கொள்ளலாம். இவர் சைனரில் ஒரு சிலரைப் போலத் துறவறத்தையே வற்புறுத்தாது,
மனைவாழ்க்கை மா
தவம் என்றிரண்டும் மாண்ட
வினைவாழ்க்கையாக
விழைப (73)
என இல்லற துறவறங்களை ஒரு நிகராகப்போற்றியுள்ளமையும் நோக்கத்தக்கது. இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பதுமுன்பே கண்டோம். திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே.
இவரது நூல் இல்லற நூலாயும், துறவறநூலாயும், வீட்டு நெறி நூலாயும் உள்ளது என்று சிறப்புப்பாயிரச் செய்யுள் புகழ்கிறது. 'பொய் தீர் புலவர்'எனத் தொடங்கும் 66-ஆம் பாடல்,
பொய் இல் புலவர் புரிந்து உறையும்மேல் உலகம்
ஐயம் ஒன்று இன்றி அறிந்து உரைப்பின், வெய்ய
பகல் இன்று, இரவு இன்று, பற்று இன்று, துற்று இன்று,
இகல் இன்று, இளிவரவும்
இன்று
என வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலோடு (பொதுவியல்4) பெரிதும் ஒப்புமையுடையது. வடமொழி ஸ்மிருதி நூல்களில் வழங்கும் துவாதச புத்திரர்களைப் பற்றி,