Primary tabs
என்பதாம். தேவர் காட்டும் ஆருகத சமயநெறி, பிற்காலத்தே காணப்பட்ட வறட்டுச் சமணநெறி போன்றதன்று, அருளுடைய திருக்குறள் நெறியையே பெரிதும் தழுவியதென்று தெரிகின்றது. பற்றுளம் அகலநீக்குதல் ஒன்றே குறிக்கோள். மனிதன் அரசனாயிருக்கலாம் ; அறநெறி பிறழாமல் போரிடலாம் ; மகளிரை மணக்கலாம் ; குறிக்கோளைமட்டும் மறந்துவிடாமே இருத்தல் வேண்டும் ; காமஞ்சான்ற கடைக்கோட்காலைத் துறந்துபோய் நற்றவம்புரிதல் சாலும் என்பது தேவர் கொள்கை என்று தெரிகிறது. இந்தக் கொள்கையையே தேவர் இம் மாபெருங் காப்பியத்திலே உலகினர்க்கு விரித்து விளம்பியிருக்கின்றனர்.
ஆயர்பாடியிலே கண்ணன் பற்றின்றியே மகளிர் பலரை மணந்து மெய்வாழ்க்கை காட்டினாற்போன்று சீவக சாமியும் எண்மர் மகளிரை மணந்தும் பகையை வென்றும் அருளாட்சி நடத்துகின்றான். கூர்த்த உணர்வுடையோன் ஆகலின் மிக விரைவிலேயே அவன் மெய்யுணர்ந்து விடுகின்றான். தவத்தின் முன்னர் இப் பேருலகம் ஒரு சிறு ஐயவித்துணையும் ஈடாகாது என்றுணர்ந்து விடுகின்றான். உணர்ந்தவுடன் படநாகம் தோலுரித்தாற் போன்று உலகத்தை உதறித்தள்ளி வீடுபேறடைகின்றனன். ஒவ்வொரு மனிதனும் இந்தச் சீவக சாமியைப் போலவே வாழ்ந்து கடைத்தேற வேண்டும் என்பதே அடிகளார் இந்தக் காப்பியத்தாலே உலகினர்க்குச் செய்யும் செவியறிவுறூஉ ஆகும் என்க.
ஒரு காப்பியம் மக்கள் உள்ளத்தை எதனாலே அள்ளிக் கொள்ள வல்லதாகின்றது என்னும் உண்மை ஒன்றனைத் திருத்தக்கதேவர். நன்குணர்ந்தவர், காவியங்களிலே அவலச் சுவைமட்டுமே மாந்தர் நெஞ்சத்தை உருக்கி வார்த்துவிடும் பண்புடையதாகும். மற்றொரு தேவராகிய தோலாமொழித் தேவருந்தாம் பெருங்காப்பியம் செய்திருக்கின்றனர். இந்த நுணுக்கத்தை அவர் சிறிதும் அறிந்திலர் என்றே தோன்றுகின்றது. சூளாமணி முழுவதையும் படித்தாலும் ஒரு துளி கண்ணீர் சுரவாது. இஃது என்னநுபவம். சிந்தாமணியிலோ தேவர் முதலிலம்பகத்திலேயே அவலச் சுவையினாலே கற்போர் நெஞ்சத்தைப் பாகாக உருக்கிவிடுகின்றார். பாவம் ! முடிமன்னன் பெருந்தேவியாருந் துணையின்றி "உண்டென வுரையிற் கேட்பார் உயிருறு பாவ மெல்லாம் கண்டினித் தெளிக" வென்று காட்டுவாள்போல ஆகி, நெருநல் வரையில் , அரண்மனையிலே தேவர் மகளிர் என மகிழ்ந்திருந்தவள் வெண்டலை பயின்ற சுடுகாட்டிலே தமியளாகிச் சீவக சாமியை ஈன்றெடுக்கும் நிகழ்ச்சிபோன்ற