Primary tabs
முன்னுரை
மறுநாள் இரவினும் அக்காதலர் அம்மண்டபத்தே கூடுவது என்று முடிவு செய்திருந் தபடியால் வாசவதத்தை மானனீகையைச் சிறைப்படுத்திவிட்டு மறுநாள் இரவில் தானே சென்று காஞ்சனமாலையை ஒருசார் மறைய வைத்து அம் மண்டபத்திலே புகுந்திருந்தனள். பின்னர்ப் புதுக் காதலியைக் காண்டற்கு விரைந்தெய்திய உதயணன், அம் மண்டபத்தே புகுந்து அங்கிருந்த வாசவதத்தையை மானனீகையாக மதித்து ஆர்வத்தோடே தன் மலர்க்கையை அவள் பணத்தோளில் வைத்தனள். வாசவதத்தையும் வாய் வாளாது வேந்தன் செய்தது காண்குவம் என்று கருதி அவன் கையினைத் தன் கையாற்றள்ளினள்.
மானனீகையே ஊடினள் என்று நினைத்த உதயணன் உள்ளுள்ளே உவந்து,
''முரசு முழங்கு தானை அரசொடு
வேண்டினும
தருகுவல் இன்னே பருவரல்
ஒழியினி
மானே ! தேனே ! மான னீகாய் !''
வாசவதத்தை தானும் மீண்டும் அவன் உரைப்பது கேட்க எண்ணிக் கால் கொடாது மறுத்து ஒதுங்கினள்.
இங்ஙனம் ஊடல் முதிரவே என் செய்வான் அளியனே ! அளியன் ! உதயணன் அவள் காலில் வீழ்ந்து வணங்கினான்.
அந் நீக்கத்தைப் பொறாத உதயணன் இவட்கு ஒரு புதுமைச் செய்தியைக் கூறுமாற்றால் இவளை ஊடல் தீர்ப்பேன் என்று கருதி '' மானே தேனே மானனீகாய் ஒரு மொழி கேள் !'' வாசவதத்தை,
''இயைந்த நெஞ்சுடை யாமிரு
வர்க்கும்
கழிந்த
கங்குலின் நிகழ்ந்ததை
எல்லாம்
கனவது முந்திய வினைய
தாதலின்
அதனிற் கண்டு எனக்கு ஒளியாது''
அதுகண்ட வாசவதத்தை கொல்லெனச்
சிரித்து, ''மிக்கோய் கூறிய மானுந் தேனும் மானனீகையும் யான் அன்று ! என் பெயர் வாசவதத்தை'' என்றாள். அந்தோ அப் பொழுது அவன்
நிலைமை
என்னாம்?
அன்பர்களே! நகைதானும் முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்று வகைப் படும் என்ப. அவற்றுள் ஈண்டுக் காட்டிய பகுதி பெருகச் சிரித்தற்கு ஏதுவாகும் இயல்புடைத்து. இப்பெருங்கதையில் இம்மூவகைச் சிரிப்புக்கும் நிலைக்களனாவன பற்பல பகுதிகள் உள்ளன. அவற்றைப் பயின்றே இன்புறுதல் வேண்டும்.