Primary tabs
முன்னுரை
10.பெருங்கதையிற் சங்க காலத்துத் தண்டமிழ் வளம்
இவ் வுதயணன் கதை இடை கடை என்னும் இருவகைச்
சங்க நூல்களையும் நன்கு ஆராய்ந்து
செய்யப்பட்டது என்று அடியார்க்கு நல்லார்
கூறியதற்கிணங்க இப் பெருங்கதைப்
பெருங்காப்பியத்தில் யாண்டும் பண்டைத்
தமிழ்வளம் மிக்குக் காணப்படுகின்றது.
கடைச்சங்க காலத்தின் இறுதியில் நந் தமிழ்
இலக்கியத்தில் ஒரு மறு மலர்ச்சி உண்டாயிற்று
என்று முன்னர் விளம்பினாம். மறுமலர்ச்சி
என்பது பழைய நலனெலாம் புத்துருவத்திற்
றோன்றுவதேயாம். பழையவற்றை அழித்துப்
புதியதாகத் தோன்றுமொன்றனை மறுமலர்ச்சி என்னல்
பொருந்தாது. அதனைப் புரட்சி என்று
வேண்டுமானால் கூறலாம். புரட்சியினும்
மறுமலர்ச்சியே மக்கட்கு நலமளிக்கவல்லது.
மாந்தர் உள்ளம் பழைமையை வெறுத்துப் புதுமையை
அவாவும் ஒரு பண்புடையது. ஆதலால் சான்றோர்கள்
இன்றியமையாப் பழைய நலங்களைப் புத்துருவிற்
சமைத்து மீண்டும் அதனை மாந்தர் விரும்பும்படி
செய்கின்றனர். இத்தகைய மறுமலர்ச்சி
காலந்தோறும் நிகழ்ந்து வருதலை வரலாறுகளும்
நமக்கு நன்கு
காட்டாகின்றன. மாந்தர் நலம் வளர்வதற்கு இம்
மாற்றம் இன்றியமையாது என்றும் தோன்றுகின்றது.
ஒரு மறுமலர்ச்சிக்குப் பின்னர் அதற்கு முன்பு
பயிற்சியிலிருந்த முறை நின்றுவிடும். இம்
முறைப்படி மூன்று சங்ககாத்தும் பயின்று வந்த
தமிழ் இலக்கிய ஆக்கநெறி இம் மறுமலர்ச்சிக்
காலத்தே நின்றுவிட்டது. இம்
மறுமலர்ச்சியினாற் றோன்றிய இப் பெருங்கதையும்
சிந்தாமணியும் சிலப்பதிகாரமும் பிறவுமாகிய
காப்பியங்கள் மிக அழகான
முறையில் நம் பண்டைச் சங்கத்தமிழ்ப்
பண்பாட்டினை நமக்குப் பேணிப் புத்துருவந்
தந்து அளிக்கின்றன. இவற்றுள் முன்தோன்றிய
காரணத்தால் இப் பெருங்கதை ஏனைக்
காப்பியங்களினும் பெரிதும் பண்டைப் பண்பாடு
மிக்கு மிளிர்வதாகின்றது. இந்நூலின் செய்யுட்
போக்குப் பெரும்பாலும் பண்டைய பாட்டுந்
தொகையும் பதினெண்கீழ்க் கணக்குமாகிய சங்க