Primary tabs
இயற்கைப் பொருள்களாகிய நிலன், கடல், வானம்,
காலம்' முதலியவற்றை ஓதுவோர் உளத்தே கண்கூடாகக்
கொணர்ந்து நிறுத்தவல்ல வருணனைப் பகுதிகள்
இந்நூலின்கண் யாண்டும் நிரம்பியுள்ளன.
அவ்வருணனைகளினும் எத்தனை எத்தனை உயரிய
கருத்துக்களை இப்புலவர் பெருமான் உவமை
முதலியவற்றாலே நமக்கு உணர்த்துகின்றார். இதோ ஒரு
மாலைப்பொழுது
வருகின்றது காண்மின். நாள்தோறும் நாங் காணும்
வறிய மாலைப்பொழுதாக அது வரவில்லை.
முன்னுரை
''நவிறொறும் இனிய ஞானம் போலப்
பயிறொறும் இனியநின் பண்புடைக் கிழமை
உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் இன்புற''
(5. 7 : 148 - 150)
என்னுமிது,
''நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு''
(குறள் : 783)
எனவரும் திருக்குறளிற் பிறிதன்று.
''உடையழி காலை உதவிய கைபோல்
நடலை தீர்த்தல் நண்பன தியல்பு''
(5.3 : 31 - 40)
என்னுமிது,
''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு''
(குறள் : 788)
என்னுந் திருக்குறள் ஆசிரியத்தாலே அமைந்தது.
தமிழ் எனும் அளப்பருஞ் சலதியின் மூழ்கி
ஆண்டுள்ள அழகிய கருத்துக்களும்
சொற்களுமாகிய அரும்பெறள் மணிகளை எடுத்து,
இப் பெருங்கதை என்னும் கருவூலத்தே ஒரு
சேரக் குவித்துத் தந்து உள்ளார் இதன்
ஆசிரியராகிய கொங்கு வேளிர் என்னும்
நல்லிசைப்
புலவர் என்று சுருக்கமாகக் கூறி விடுதல்
அமையும். அங்ஙனமன்றி அப் பண்டைத்
தமிழ்வளனெல்லாம் இதன்கண் எடுத்துக்காட்ட
இச் சிறு முன்னுரை இடந்தரா தன்றோ!