தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Bharatham


முகவுரை

அருந்தமிழன்பர்காள்!

“அரிதரிதுமானிடராதலரிது” என்றபடி பெறுதற்கு அரிய மானுடப்பிறவி
யெடுத்தற்குப்பயன் இம்மையில் நூல்களைக் கற்றலால் நல்லறிவு பெற்று
முன்னோர் கடைப்பிடித்த வழியை மேற்கொண்டு அவ்வாயிலாக மறுமையில்
நற்கதிபெறுதலேயாம். அதற்காகவே நூல்களில் தலைசிறந்த வேதம் கடவுளால்
வெளியிடப்பட்ட தென்பது, வைதிகமதத்தவரெல்லார்க்கும் ஒப்ப முடிந்த
பொருளாம்.

அதன்பொருளை யுள்ளவாறு அறிவது கருவியின்றி யியலாத செயல்:
அன்றியும், அஃது எல்லார்க்கும் இயைவதுமன்று. ஆகவே, பண்டைக்காலத்துப்
பெரியோர் அவ்வேதங்களின் பொருளையறிவதற்கு ஸ்மிருதி இதிஹாஸ
புராணங்கள் ஆகிய நூல்களை யியற்றினர். அவற்றுள்ளும், ஸ்மிருதி,
வேதத்தைப்போலவே யுள்ளது: இதிஹாஸபுராணங்களே யாவரும் ஓதியும்
கேட்டும் அறிதற்கு ஏற்றனவாம். இவை வேதத்தின்பொருளை வளர்ப்பன
என்ற காரணத்தால் உபப்ரும்ஹணங்க ளெனப்படும்: உபப்ரும் ஹண மென்ற
சொல்லுக்கு வளர்ப்பது என்று பொருள். வேதோபப்ரும்ஹணங்களான
இதிஹாஸபுராணங்களுள் இதிஹாஸங்களே சிறந்தனவாதலால்,
‘இதிஹாஸபுராணங்கள்’ என்று புராணங்களுக்கு முன் இதிஹாஸம் வைத்து,
வழங்கப்படுவதாயிற்று.

இதிஹாஸமென்பது பழையதொரு சரித்திரத்தைப் பலகிளைக்
கதைகளைக்கொண்டு கூறுவதாம். அங்ஙனமுள்ளவை பாரதமும் இராமயணமுமே
யென்பது யாவரும் உடன்பட்ட பொருளாம். அந்தப் பாரதம் நம் தமிழ்மொழியில்
வழங்குவதே நம்நாட்டாரால் போற்றுதற்கு உரியது. இவ்வாறாகிய தமிழ்ப்பாரதம்
எளியநடை வாய்ந்ததாய், மிடுக்குள்ளதாய், உள்ளும் புறம்பும் பொலிந்திலங்
குஞ்சுவையுடையதாய், யாவராலும் போற்றப்படுவதாய், நம் வில்லிபுத்தூராராற்
கௌடநெறியாற் பாடப்பெற்றுள்ளது.

இது எளியநடையை யுடையதேயாயினும் வடமொழி மிகக் கலந்திருத்தலால்,
தென்மொழியறிவோடு வடமொழியறிவும் இல்லாதவர்க்கு உண்மைப்பொருள்
காண்டலரிது: ஆகவே, அப்படிப்பட்டதற்கு உண்மைப்பொருள் விளங்க உரை
இன்றியமையாதது. இத்தகைய உரை, காலஞ்சென்ற எனது ஆசிரியன்மாரான
ஸ்ரீ.உ.வே. வை. மு, சடகோபராமாநுஜாசார்ய ஸ்வாமிகளாலும்,  ஸ்ரீ.உ.வே.சே.
க்ருஷ்ணமாசார்ய ஸ்வாமிகளாலும் பலபகுதிகட்கும் இயற்றி முன்னரே
அச்சிடப்பட்டது: யானும் சில பகுதிக்கு அவர்களுடனிருந்து உரையெழுதிப்
பழகியதுண்டு. அங்ஙன் வெளியிட்ட பகுதிகள் - சபாபருவம் பீஷ்மபருவம்
துரோணபருவம் கர்ண பருவம் சல்லியபருவம் சௌப்திகபருவம் என்பனவாம்.

இதுவரையும் வெளிவாராதவை, ஆதிபருவமும் ஆரணிய பருவமும்
விராடபருவமுமே. (இவற்றிலும் பலசருக்கங்கட்கு முன்னரே அவர்களெழுதி
வெளிப்படுத்திய உரை உண்டு.)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 16:33:51(இந்திய நேரம்)