தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Bharatham


vii

திறமைகளைக் கேள்வியுற்று இவரை வரவழைத்து அநேக சன்மானங்கள்செய்து
தனது ஆஸ்தாநபண்டிதராக அமைத்துவைத்து, ஒருநாள் இவரை நோக்கி
‘வடமொழியில் ஸ்ரீவேதவியாசமகாமுனிவரால் விரித்துரைக்கப்பட்ட
மகாபாரதசரித்திரத்தைச் செந்தமிழில் விருத்தப் பாடல்களினாற் சுருக்கமுற
ஒருபெருங்காப்பியமாகப் பாடித் தந்தருளல் வேண்டும்’ என்று பிரார்த்திக்க,
க்ருஷ்ணனுடைய சரித்திரம் ஆங்காங்கு வருவதுபற்றி அவ்வேண்டுகோளுக்கு
இசைந்து சொற்சுவை பொருட்சுவைகள் மிக்குவிளங்கும்படி நல்ல நடையிலே
இவ்வில்லிபுத்தூரார் நாலாயிரத்து முந்நூற்றுச் சொச்சம்பாடல்களாற் பாடினார்.

இவர், தம்காலத்திற் கல்விச்செருக்கு அடைந்திருந்த புலவர்கள் பலரையும்
தமது வித்தியாசாமர்த்தியத்தால் வென்று, அவ்வெற்றிக்கு அடையாளமாக,
தோற்றுப்போன புலவர்களின்  காதுகளைத் தமதுகையிலே எப்பொழுதும்
ஆயுதமாகவைத்துக்கொண்டுள்ள துறட்டுக்கோலால் மாட்டியிழுத்து
அறுத்துவந்தன ரென்பது, “குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டிய னீங்கில்லை
குறும்பியளவாக்காதைக் குடைந்து தோண்டி, யெட்டினமட் டறுப்பதற்கோ
வில்லியில்லை யிரண்டொன்றா முடிந்து தலையிறங்கப்போட்டு, வெட்டுதற்கோகவி
யொட்டக்கூத்த னில்லை விளையாட்டாக் கவிதைதனை விரைந்துபாடித்,
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைக ளுண்டு தேசமெங்கும் புலவரெனத்
திரியலாமே” என வழங்குந்தனிப்பாடலினால் அறியப்படும். இவர் காலத்து
அரசர்கள் இவரிடத்தில் மிகவும் அன்புவைத்திருந்ததனால், இவர் இங்ஙனஞ்
செய்ய இடங்கொடுத்து வந்தார்கள்.

இவருடைய காலம்:- பாயிரத்தில் “நான்காஞ்சங்கமென முச்சங்கத்
தண்டமிழ்நூல் கலங்காமல் தலைகண்டானே” என்று வரபதியாட்கொண்டா
னென்னும் அரசனைக் கூறியிருத்தலாலும், அவ்வரசனை இரட்டையர்களும்
பாடியிருத்தலாலும், அவ்விரட்டையராற் பாடப்பட்ட இராசநாராயணசம்புவராய
னென்பான் கி. பி. 1331 - 1383 வரை ஆட்சிபுரிந்தானென்று
சாசனவாராய்ச்சியாளர் கூறுவதாலும், இவர்காலம் பதினான்காம் நூற்றாண்டின்
இடைப்பகுதியாகுமென்றும், அருணகிரியார் காலமும் இதுவே யென்றுங் கூறுவர்.

இவ்வில்லிபுத்தூரார் சிவத்துவேஷம் பாராட்டுகிற வீரவைஷ்ணவரல்லர்;
அது - முதலில் விநாயகஸ்தோத்திரஞ் செய்திருத்தலாலும், அருச்சுனன்
தீர்த்தயாத்திரைச் சருக்கத்திலும், அருச்சுனன் தவநிலைச்சருக்கத்திலும்
பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்திலும் சைவசம்பிரதாயத்துக்கு வழுவுறாதபடி
சிவபிரானைச் சிறப்பித்தும் இதரதேவர்களைத் தாழ்த்தியுங் கூறியதனாலும்
நன்கு புலனாகிறது. வைஷ்ணவராகிய இவர் சிவபிரானைத் சிறப்பிக்கு மிடத்துத்
தமது பரதேவதையாகிய திருமாலையும் தாழ்த்திக் கூறுவது - தமது காலத்திருந்த
அரசரை மகிழ்விக்கவேண்டித் தம்கொள்கையாகவன்றிப் பிறன்கோட்கூறலாகக்
கூறியதாகு மென்க. அன்றியும், வியாசர் புராணங்களில் ஒவ்வொரு தேவரை


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 17:29:55(இந்திய நேரம்)