Primary tabs
கொடுக்கவில்லை என்று நீ இப்போது கூறினால், இழந்த நாட்டினையும், இழந்த மைந்தனையும் திரும்பப் பெற்றுக்கொள்வாய்!' என்றான். உடனே அரிச்சந்திரனும் சந்திரமதியும் 'புலையனும் விரும்பாத இவ்வூனுடம்பை வளர்ப்பதற்காகப் பொய் சொல்லமாட்டோம் நாங்கள்; நீ போ!' என்று மறுத்தனர். மீண்டு வந்தான் கௌசிகன்; அம் முனிவனையும் அழைத்துடன் இருத்தினான் இந்திரன். நிகழ்ச்சி காணக் கொலைக்களம் நோக்கி நின்றார்கள் எல்லாரும்.
அரிச்சந்திரன் சந்திரமதியை நோக்கி,'நீ என்றும் வழக்கமாக, வழிபடுந் தெய்வத்தை வணங்கிக் கிழக்கு நோக்கி இரு' என்றான். அவ்வாறே அவள் இருந்தாள். வலக்கையில் வாளெடுத்தான்; 'பசுபதி என்ற சிவன் முதல்வனாயிருப்பின், அவன் கூறியது மறைமொழி ஆயின், அம்மொழியிற் சத்தியம் சிறந்ததாயின், அச் சத்தியத்திற் பிறழாதவன் நான் ஆனால், இவள் கற்புடையவளாயின் இறவாதிருப்பாளாக! இல்லையெனில், இறப்பாளாக' என்று கருத்திலெண்ணி வாளாயுதத்தை ஓங்கி வெட்டினான். அவ் வாள் கழுத்தில் மணமாலையாக விழுந்தது! மன்னன் வெறுங்கையுடனின்றான். சந்திரமதி தீயிற் சுடப்பட்ட பொன் போலப் பொற்புடன் இருந்தாள். இவ்வியத்தகு செயல் கண்டு மண்ணவர் கூடினர்; விண்ணுலகிலிருந்தவர் குதித்து வந்து கூடினர்; கொடிய கோசிகனும் ஆடிவந்தான்; வசிட்டனும் வந்தான்; முனிவர் பலரும் கூடினர்; உமையும் சிவனும் ஒருங்கு வந்து கண்டனர். பிரமன், திருமால், பிள்ளையார், முருகன் முதலியோரெல்லாரும் வந்தனர். அரசன் சிவன் முதலிய தவர்களையெல்லாம் கண்டு வியந்து கைகுவித்து வணங்கினன். 'செய்தவம் அறியேன் சிறியேன்' என்றான். எல்லாரும் அவன் வாய்மையைப் புகழ்ந்து வாழ்த்தினர்; சந்திரமதி கற்பினைப் புகழ்ந்து தன் கையாற் பற்றி வாழ்த்தினள் பார்வதி. முருகன் தன் கையால் 'வருக' என அழைத்தான் மைந்தரிருவரையும். காசிமன்னன் மைந்தனும் தேவதாசனும் உயிர்பெற்றெழுந்து நின்றனர். மூவரும் தேவரும் அரிச்சந்திரனை நோக்கி 'வாய்மையும் நீதியும் வழுவாது அரசுபுரிவோர் உன்னையன்றி ஒருவரும் இலர்' என்று பாராட்டிப் புகழ்ந்தனர்.
பின்னர்ச் சிவபெருமான் கோசிகனை நோக்கி, 'யாவரும் அறியுமாறு நீ அரிச்சந்திரனுக்கு விளைத்த கொடுமைகளையும், அவன் அவற்றைப் பொறுத்து, வாய்மை தவறாது வாழ்ந்த வகையும் விரித்துக் கூறுக' என ஆணை தந்தார். அவ்வாறே கூறக்கேட்டனர் அனைவரும். இந்திரன் 'தோற்றவர் யார்' என்று வினவினன். கோசிகன் 'நானே தோற்றவன்; என் தவத்திற் பாதியும் இப்போதே கொடுத்தேன்; நாடு நகரங்களையும் தந்தேன்; சென்று அரசுபுரிக' என்று அரிச்சந்திரனை வேண்டினான். 'நான் இரந்தவர்க்கு ஈந்த பொருளை வாங்குவேனோ? அஃது எனக் கிழிவுதரும்' என்று கூறி மறுத்துரைத்தான் மன்னன். 'புலையனுக் கடிமையாகிச் சுடுகாடு காத்தவன் இனி நாடு காப்பது பெருமையாமோ?' என்றும் எடுத்துரைத்தான். அப்போது தீத்தெய்வம் வந்து 'நான்தான் மறையவனாய் வந்து நின் மனைவியையும் மைந்தனையும் விலைக்கு வாங்கினன். ஆவணச்சீட்டினைப் பார்' என்று அரன் முன் வைத்தான். யமன் வந்து 'நான்தான் புலையனாக வந்து நின்னை விலைகொடுத்து வாங்கினேன்; நீ காத்த சுடுகாட்டினை யுற்று நோக்குவாய்; பூஞ்சோலையும் பொய்கையும் வேள்விச்சாலையும் விளங்குவதைக் காண்பாய்; முறிச்சீட்டும் காண்' எனக் காட்டி அரன் முன் வைத்தான். ஈசன் 'நீ இழிவுடையை யல்லை; அயோத்தி சென்று பண்டுபோல் அரசுபுரிக' என்று ஆணை தந்தான்.
அரன் ஆணை மறுக்க யாரால் இயலும்? ஆணையின்படி யமைந்து நின்றான் அரிச்சந்திரன். இந்திரனையும் காசியரனையும் அழைத்து 'நீங்கள் அரிச்சந்திரனுக்கு முடிசூட்டிவிட்டு, உங்கள் நகர்க்குச் செல்லுங்கள்' என்றும் பணித்துச் சிவபெருமான் கயிலை சென்றார். இந்திரனும் தேவர்களும் காசிமன்னனும் குடிகளும் அரிச்சந்திரனை யழைத்துக்கொண்டுபோய் அயோத்தி நகரை யலங்கரித்து, மறையோர் வாழ்த்துக் கூற, மங்கலமுரசு முழங்க மணிமுடி சூட்டி மகிழ்ந்தனர். பின்னர் அவரவரிருக்கைக்குச் சென்றனர். எல்லாரும் சென்றபின் வசிட்டமுனிவனும் காசி வேந்தனும் கலந்து பேசியிருந்தனர். காசி மன்னன் வசிட்டரை நோக்கி, 'கௌசிகன் இவ்வாறு வன்கண்மையாக அரிச்சந்திரனுக்குத் தீமை இழைத்ததற்குக் காரணம் யாது?' என வினவினன்.
கோசிகன் வரலாற்றை வசிட்டன் கூறத்தொடங்கினன். "பிரமன் வழிவழியாக வந்தவர்களிற் குசன் என்பவன் ஒருவன். அவனுக்கு குசன், குசநாபன், வதூர்த்தன், வசு என்று நால்வர் மக்கள் இருந்தனர். அவர்களிற் குசநாபன் என்பவன் கௌசாம்பி நாட்டினை யாண்டான். அவனுக்கு நூறு பெண் மக்கள் பிறந்து வளர்ந்தனர். ஒருநாட் பூஞ்சோலையில் அவர்கள் உலவும்போது, காற்றுத் தெய்வம் கண்டு அவர்கள்மேற் காதல் கொண்டு காமவேட்கை தீர்க்குமாறு வேண்டினன்; அம் மங்கையர் 'எம் தந்தையரிடங்கேட்டு முறைப்படி மணம் புரிந்துகொள்; அதுவே முறையாகும். களவுப்புணர்ச்சிக்கு உடன்படோம்' என்று மறுத்தனர். அவன் சினந்து சூறைக்காற்றாக வந்து முதுகு முறியும்படி மோதிப் பூமியில் வீழ்த்திப் போயினன். முதுகு முறிந்த மங்கையர் சென்று தந்தையிடம் உண்மையை யுரைத்தனர். அவன் மனத்திலடக்கிச் சிலநாளிருந்து பிரமதத்தனுக்கு மணம்புரிவித்தான். அம் மங்கையர் நல்வாழ்வு வாழ்ந்தனர். அக் குசநாபன் வேள்விபுரிந்து, காதி என்ற வீரனை மைந்தனாகப் பெற்றான். அக் காதி மன்னன், கௌசிகை என்ற ஒரு பெண்ணைப் பெற்றான். அவட்குப்பின்