தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்



சிறுகாப்பியங்களிற் சிறப்புள்ள நூல்களாக ஆசிரியர் பாடிய கால முதல் நீடிய காலமாக இன்றுவரை வழங்குஞ் செய்யுள் நூல்கள் அரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியானம், நைடதம் ஆகிய மூன்றுமே. இம் மூன்றுள்ளுஞ் சிறந்தது அரிச்சந்திர புராணமேயாம். காலத்தான் முற்பட்டது அந்நூல். அன்றியும், சத்தியந் தவறாது வாழத் தலைப்பட்டு அளவற்ற துன்பம்பட் டழுந்திப் பின்னர் மூவரும் தேவரும் முன் வந்து வாழ்த்தி வரந்தரப் பெற்று வாழ்ந்த மன்னன் வரலாறு கூறுவது; எளிய நடை வாய்ந்ததும், இனிய சொற்கள் அமைந்ததும், சந்தம் பல வாய்ந்ததும் ஆகிய கவிகளாற் பாடப்பட்டது. "ஆசுகவிராசன்" எனப் பேர்பெற்ற காளிதேவியின் திருவருள் பெற்ற புலவராற் பாடப்பெற்றது. ஆதலால், அந்நூலைப் புலவர் பலரும் போற்றி வந்தனர்; வருகின்றனர்; வருவார் என்பது யாவரும் அறிந்ததே.

இப்போது நம் நாட்டில் வழங்கும் அச்சுப் புத்தகமாகிய அரிச்சந்திர புராணத்தில் நல்லுரை யில்லாமையும், எழுத்துப்பிழை, சொற்பிழை, பொருட்பிழை யிருப்பதும், கற்க விழைவார்க்கு இடர்ப்பாடு தருமெனக் கருதினோம். புதுமுறையில் இதனை அச்சிட்டு வெளிப்படுத்தின் மக்கட்குப் பெரிதும் நலம் பயக்கும் எனவும் ஆய்ந்தோம். புலவர்களிற் சிறந்த புலவராற் சொற்பொருளும் விளக்கவுரையும் எழுதுவித்துத் திருத்தமாக அச்சியற்றிக் கழக வாயிலாக இந்நாள் வெளிப்படுகின்றது இது. இப்புத்தகம் நல்ல கட்டடம் அமைந்தது. எழுத்துப்பிழை, சொற்பிழை முதலிய பிழைகள் காண்பதரிது. கவிகள் எல்லாம் சீர் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. பொருள் விளங்காத சொற்றொடர்களையும் பிரித்திருக்கின்றோம். படிப்பவர்க்கும் பொருள் காண்பவர்க்கும் இடர்ப்பாடு சிறிதும் இராது. ஆசிரியர் உதவியின்றியே இளைஞர்கள் படித்துச் சொல்லின்பம் பொருளின்பங் கண்டு மகிழலாம் என்பது எம் கருத்து.

நாட்டு நலம் விழைவோர் யாவரும் "அரிச்சந்திர புராணம்" என்ற எம் கழக வெளியீட்டு நூலினைக் கண்டு வாங்கிக் கற்றும் கற்பித்தும் நற்பயனடைய வேண்டுகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:41:59(இந்திய நேரம்)