Primary tabs
கூறி விடை வாங்கிப் புறப்பட்டாள். சிறார் கூறிய குறிவழியே சென்று மைந்தனைக் கண்டெடுத்துப் பலவாறு கூறிப் புலம்பித் தெளிந்து சுடலையிருக்கும் இடம் நாடி மைந்தனைத் தூக்கிச் சென்றாள். எரிந்த குறைக்கட்டைகளைப் பொறுக்கிக் கொண்டுவந்து குவித்து, அதன்மேற் பிணத்தைக் கிடத்திக் கொள்ளிக் கட்டை கொண்டுவந்து தீயை மூட்டினாள். ஆங்கே காவலிருந்து மன்னன் கண்டான்! 'நள்ளிரவில் கள்ளத்தனமாகப் பிணஞ் சுடுகின்றாள் ஒரு காரிகை!' என்பதை யுணர்ந்தான். விரைந்து வந்து 'ஏடி மூடி!' என்று வைது, பிணத்தைக் காலால் ஏற்றினான். 'வழக்கப்படி கொடுக்கவேண்டிய பணமும் ஆடையும் வாய்க்கரிசியும் கொடாமல் நீ எப்படிப் பிணஞ்சுட வந்தாய்?' என்று சினந்துரைத்தான். 'ஐயா! நான் ஓர் அடிமை! எளியவள்! இவ்வூர் வழக்கமும் அறியேன்! என் மைந்த னிறந்தவனை யெடுத்துச் சுட வந்தேன்! மனமிரங்கிச் சுடுவதற்கு உத்தரவு தரவேண்டும்!' என்று பணிவுடன் வேண்டினள். அப்போது அரிச்சந்திரன் 'நானும் அடிமைதான்! வாய்க்கரிசிமட்டும்தான் எனக்குரியது; மற்றவை என் தலைவனுக்குரியன. ஆதலால், நீ கொடுத்துத்தான் சுடவேண்டும்' என்றான். 'ஒன்றும் என்னாற் கொடுக்கவியலாது' என்றாள். 'தங்கத்தாற் செய்த மங்கிலியம் பளபளவென்று மின்னுகிறதே! அதனை எனக்குக் கொடு' என்றான். சந்திரமதி இச் சொற் கேட்டவுடன் பெருமூச்சுவிட்டாள்! 'என் கணவன் அரிச்சந்திரன் கண்ணுக்கு மட்டும் தோன்றும் திருமங்கிலியம் இப் புலையன் கண்ணுக்குத் தோன்றிய தென்ன காரணம்? என் கற்புப் போய்விட்டதுபோலும்! சிவபெருமான் என் தந்தைக்குத் தந்த வரமும் அழிந்துவிட்டதே! கோசிகமுனிவன் சிவபெருமான் முதலிய தேவர்களினும் சிறந்தவனோ!' என்று கூறி வாய்விட்டழுதாள்.
அரிச்சந்திரன் அவள் கூறிப் புலம்பும் குறிப்பினால் தன் மனைவியென்றும், தன் மைந்தனே பாம்பு கடித்திறந்தான் என்றும் அறிந்தான். மைந்தனை நினைத்து நினைத்துப் பலவாறு புலம்பினான். சந்திரமதியும் தன் கணவனென வறிந்தாள். விதியின் கொடுமையை விலக்க முடியுமோ என்று இருவருந் தெளிந்து இனிச் செய்வ தென்னென ஆய்ந்தனர். 'நான் என் கடமையை உண்மையுடன் செய்யவேண்டும். ஆதலால், நீ மறையோன்பாற் சென்று பணமும் கொள்ளியாடையும் வாங்கி வா விரைவில்! அதன் பின்னர் மைந்தனைச் சுட்டு அடக்கஞ் செய்து மறையோனிடம் போய்ச் சேர்!' என்றான் அரிச்சந்திரன். அவளும் கடமையையுணர்ந்தவளாதலால் 'அவ்வாறே சென்று வாங்கி வருகின்றேன்' என்று கூறிக் காசிநகர்த் தெருவூடே கடுகி நடந்தாள். நடக்கும்போது அவ்வழியில் ஒரு பிணம் கிடக்கக் கண்டாள். அது அவளுடைய மைந்தனைப் போலத் தோன்றியது! 'சுடுகாட்டில் நாம் வைத்த