தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


Lx

ஓம் வாலாசாபாத் இந்துமத பாடசாலையைச் சேர்ந்த வள்ளலார் மாணவர்
 இல்லத்தின் தலைவரும், ‘குருகுலம்’ இதழ் ஆசிரியருமான
அண்ணா நா. ப. தணிகை அரசு
அவர்கள் எழுதியுதவிய

அணிந்துரை

வடமொழி, தென்மொழி ஆகிய மொழிகளையும், சைவ சமய இலக்கியங்களையும் இலக்கணங்களையும், கற்றுத் துறைபோக வல்ல அருளாசிரியர் சிவஞான சுவாமிகளால் அருளிச் செய்யப்பெற்றது காஞ்சிப் புராணம். அக்காஞ்சிப் புராணம் ஏனைய தலபுராணங்களிலும் பல வகைகளில் வேறுபட்டு, உயர்ந்த சாத்திரக் கருத்துகளைத் தன்னுட் கொண்டு விளங்குவது.

மாதவச் சிவஞான சுவாமிகள் தாம் அருளிய காஞ்சிப் புராணத்தில் எல்லா விடங்களும் கருத்துச் செறிவுடையனவாய், கற்றவர்களுக்கு இன்பம் பயப்பனவாய், இனிக் கற்பவர்களுக்குச் சுவைமிகத் தருவனவாய் அமைந்துள்ளன. இந்நூலை ஐயந் திரிபறக் கற்றாலே, பதி, பசு, பாச உண்மைகளையும், இலக்கணங்களையும், பதியையடையப் பசு பயிலவேண்டிய சாதனங்களையும், அவற்றால் அடையத்தகும் பயனையும் நாம் அறிந்துகொள்ள இயலும். எனவே, இந்நூலுக்கு இனிய எளிய, சுமைமிக்க தமிழில் பொழிப்புரையானது தேவையாயிற்று.

சைவத் திருமுறைகளில் பெரும் பயிற்சியும், சித்தாந்த சாத்திரங்களில் தெளிவான அறிவும், இனிய செந்தமிழில் எழுத்து சொல்லாற்றல்களுங் கொண்டு, தமிழ்நாடு எங்கணுமுள்ள சைவ சித்தாந்தப் பேரறிஞர்களுக் கெல்லாம் அறிமுகமான அடியேனது ஆசிரியர் பொன் சண்முகனார் அவர்கள் தெளிவான பொழிப்புரை யொன்றெழுதியுள்ளனர். பேரருளாசிரியராகிய சிவஞான சுவாமிகளின் கருத்தைத் தமிழிற் சிறிது பயிற்சியுடையோரும் புரிந்துகொள்ளும் வகையில் உணரத் தெளிவாகவும் இனிமையாகவும் அமைந்துள்ளது அப்பொழிப்புரை.

ஆசிரியர் பொன். சண்முகனார் அவர்களும், அவர்தம் தந்தையார் பொன். குமாரசாமி அடிகளாரும், காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு, செந்தமிழன்னைக்கும் சைவப் பேருலகிற்கும் ஆற்றிவரும் தொண்டுகள் போற்றற்குரியன. பன்னிரு திருமுறைகளையும் பதினான்கு சாத்திரங்களையும் தாங்கள் ஓதி யுணர்ந்தாற்போல ஏனையோரும் கற்றுத் திருவேகம்பப் பெருமான் திருவடியை வணங்கி உய்ய வேண்டுமென்னும் பேரிரக்கத்தோடு அவர்கள் செய்யும் செயல்கள் பல. அவையாவும் நற்பயன் தருவனவாக!

காஞ்சிப் புராணத்தின் ஒவ்வொரு படலத்திலும் பேசப்படும் மூர்த்திகளைப் பற்றியும், ஆண்டு வழிபட்டு முத்தியடைந்தவர்களைப் பற்றியும், அவண் வழிபடுதலால் நாம் அடையத்தகும் நலங்களைப் பற்றியும் ஆசிரியர், ‘திருத்தல விளக்கம்’ என்னும் பகுதியில் எழுதியிருப்பது இப்புராணத்தின் முன்பதிப்புகளில் காணப்படாத தொன்றாகும்.

ஞான சாத்திரக் கருத்துக்கள் நாடெங்கும் பரவுதற்கு இந்நூல் சிறந்த துணையாக விளங்கா நிற்கும்.

ஆசிரியர் பொன் சண்முகனாரும் அவர்தம் முன்நிலை (பூர்வாசிரம)த் தந்தையாரும் திருவேகம்பப் பெருமான் திருவருளால் நலங்களெல்லாம் பெற்று நன்கினிது நீடு வாழ்வார்களாக!

நா. ப. தணிகை அரசு.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:12:46(இந்திய நேரம்)