தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


Lxii

என் மனத்திடை மன்னிய மன்னே’ என்றுணர்த்தியவற்றாலறியலாம். நம் மனத்தில் மறையாய் வந்து மன்னுதலும் மறைப்பொருளாய் வந்து மன்னுதலும் சிவமாகிய நுண்பொருள் நமக்கு எண்பொருளாம் வண்ணமே என்று மணிவாசகப்பிரான் திருவாய் மலர்ந்தருளினார் ஆயின், நாம் மறைப் பொருளையும் மறையையும் போற்றத் தவறுதல் கொடுமையே ஆகும் அன்றோ? “வேதங்கள் ஐயா(-நுண்ணியா) என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’’ என்று அவ்வாசிரியர் அருளியதன் உண்மைதான் என்னே! ஈண்டு ‘ஐயா’ என்றதன் பொருளை “அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க’’ என்றதிற் காண்க. அவ்வாறு கூறக் காரணம் யாது? சொற்பதங் கடந்த தொன்மையே காரணம். ‘மிக்க வேத மெய்ந்நூல் சொன்னவனே சொற்கழிந்தவனே’ என்றதால், வேதாந்தனே வேதமுதல்வனாதல் கூடும் என விளங்கும். விளங்கவே வேதத்தால்தான் வேதாந்தனை உணர்தல் வேண்டும் என்பது பெற்றாம்.

வேதத்தை உணர்தல் முதற்கடப்பாடு. அவ்வேதத்தின் முடிவான பொருளை உணர்தல் அடுத்து நிகழ்தற்பாலதே. அஃதாவது வேதத்தை உணரும் போழ்தை அடுத்தே வேதாந்தப் பொருளையும் உடன் அறிந்து வருவதாம். போழ்தடுத்து என்பது போழ்தத்து போதத்து என மருவிற்று. கம்பராமாயணம் பிரபந்தக் கட்டளை (பதினொன்றாவது திருமுறை)களில் உள்ள ஆட்சியால் அவ்வுண்மையை அறியலாம். வேதத்தை அருளிய முதற் பொருளை அவ்வேதத்தையே கொண்டு உணர்தல் வேண்டும்.

வேதத்தை உணர்தற் கருவி உபவேதம், அங்கம், உபாங்கம் என்று முத்திறப்படும். அவற்றுள் உபவேதம் நான்கு; அங்கம் ஆறு; உபாங்கம் நான்கு. அந்நான்கும் புராணம், நியாய நூல், மீமாஞ்சை, மிருதி என்பன. அவற்றுள். “புராணம் பரமசிவன் உலகத்தைப் படைக்குமாறு முதலாயின கூறும் வேதவாக்கியப் பொருள்களை வலியுறுத்து விரித்துணர்த்துவது. இதிகாசமும் ஈண்டு அடங்கும்.’’ (சிவஞானபோத மாபாடியவசநம்) “அயன் என்றது அவ்வேதத்திற்கு அங்கமாய் அயனாற் செய்யப்பட்ட பதினெண் புராண நூலையும் மாயோன் அவதாரமாகிய வியாதனாற் செய்யப்பட்ட இதிகாச நூலையும்’’ (சிவஞானசித்தியார், அவையடக்கம்)

திருவாசகத்தின், ‘மறையின் பொருளுமாய் வந்து மன்னியமன்’ என்ற மறைப்பொருளிற் புராணமும் கொள்ளப்படும். ஆதலால், சிவஞான சித்தியாரிற், “சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப் பொருளை மிகத் தெளிந்தும் சென்றால் சைவத் திறத்தடைவர்’’ என்றருளினர் அருணந்தி தேவநாயனார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:13:06(இந்திய நேரம்)