தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


830
காஞ்சிப் புராணம்

     காமேச்சரம்: இறைவன் சித்தத்தில் தோன்றிய சித்தசன் எனப்பெறும் மன்மதன் சிவபிரானை வழிபட்டு உயிர்கள் தோற்றுதற்குக் காரணமான ஆண்பெண் சேர்க்கையை உண்டாக்கி இரதிக்கு இனியனாய் இருந்து கொடுப்போர் கொள்வோர் உள்ளத்திருந்து அச் செயலைச் செய்வித்து மூவுலகினும் தன் ஆணையைத் தடையின்றி நிகழ்த்தும் பேற்றினை வேண்டினன். பெருமானார் திருவுள்ளப்படி மன்மதன் காஞ்சியை அடைந்து சருவதீர்த்தத் தென்கரையில் சிவலிங்கம் நிறுவிப் போற்றிக் கருதிய வரத்தைப் பெற்றனன். அவனை மனத்தில்கொண்டு தானம் பெற்றால் பெற்ற பிராமணர் ஆசையென்னும் குற்றத்தினின்றும் நீங்குவர். இத்தலம் காமேச்சரம் எனப் பெற்றுச் சருவதீர்த்தத் தென்கரையில் விளங்கும்.

     தீர்த்தேச்சரம்: காமாட்சியம்மையார் சிவபூசனையில் இறைவனார் ஏவலின் அண்டத்தின் அகத்தும் புறத்தும் உள்ள தீர்த்தங்கள் யாவும் ஒருங்கு திரண்டு போந்து அம்மை இறைவனைத் தழுவிக்கொண்ட பின்பு அத்தீர்த்தம் யாவும் சருவ தீர்த்தம் என்னும் பெயரால் காஞ்சியில் தங்கிச் சிவபிரானைத் தீர்த்தராசன் எனச் சிவலிங்கம் நிறுவிப் போற்றிப் பெற்ற திருவருளுடைய அத்தீர்த்தத்தில் மூழ்கித் திருவேகம்பப் பெருமானை வணங்கினோர் எல்லா நலங்களும் பெற்றுக் கொலைப்பாவங்களும் நீங்கும் நிலைமையைப் பெற்றுத் திகழ்வர். அத்தீர்த்தத்தில் முழுகித் திருவேகம்பரைத் தரிசித்தோர் பிறப்பிற் புகார் முத்தியைத் தலைப்படுவர். பிரகலாதன், விபீஷணன், பரசிராமன், அருச்சுனன், அசுவத்தாமன் என்றின்னோர் முறையே தந்தையையும் தமையன்மாரையும், வீரரையும், குரு முதலியோரையும், கருவையும் கொன்றழித்த பாவங்களை முழுகியும் தரிசித்தும் போக்கிக்கொண்டனர். சருவதீர்த்தத்தின் பெருமையை முற்றச் சொல்லவல்லவர் இலர். இத்தலம் சருவதீர்த்தத்தின் மேற்குக் கரையில் இரணியேசத்திற்குக் கிழக்கிலுள்ளது.

     கங்காவரேச்சுரம்: வருணன் கங்காதேவியுடன் இறைவனை வணங்கிப் போற்றி நீர்க்கும், நீரிடை வாழும் உயிர்களுக்கும் தலைவனாயினன். இத்தலம் கங்காவரேச்சுரம் எனப் பெற்றுச் சருவதீர்த்தக் கரையின் கிழக்கில் மேற்கு நோக்கிய சந்நிதியை உடையது.

     விசுவநாதேச்சரம்: உலகில் உள்ள சிலதலங்கள் யாவும் ஒருங்கு சூக்குமமாகப் பொருந்தியிருக்கும் தலம் இதுவாகும். காசி விசுவநாதரும் காசியினும் காஞ்சி சிறந்ததென்று இங்கெழுந்தருளியுள்ள சிறப்பினது. இப்பெருமான் திருமுன்னர் முத்தி மண்டபம் ஒன்று உளது. இவ் விசுவநாதரை வணங்கித் திருமுன் புள்ள முத்திமண்டபத்தைக் கண்டவர் முத்தராவார். இத்தலமும் மண்டபமும் சருவதீர்த்தத்தின் மேற்குக் கரையில் இரணியேசம், தீர்த்தேச்சரம் என்னும் தலங்களுக்கு வடக்கே அடுத்துள்ளன.

     முத்தி மண்டபம்: உலகெலாம் ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே மாறிலாதிருந்திடு வளங்கொள் காஞ்சியில் மூன்று மண்டபம்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:20:17(இந்திய நேரம்)