தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


காஞ்சிப் புராணம்
832

இத்தகு ஆணைகளை விதித்தோம்’ என்றருளி மறைந்தனர். திருமாலும், பிரமனும் காஞ்சியை அடுத்துச் சிவலிங்கம் நிறுவிப் பூசித்துப் பயன் பெற்றனர். சிவலிங்க பூசனையின் பயனை வரையறுத்துக் கூற வல்லவர் ஒருவர் உளரேயோ?

மகாலிங்கத் தானம் என்னும் இத்தலம் கேசரிகுப்பம் அப்பாராவ் முதலியார் தெருவில் மேற்கு நோக்கிய தின்பினை உடைத்தாய் விளங்குகின்றது. மிகப் பெரிய திருவுருவம் விளங்கும் இம்மூர்த்தியை அண்டக நாயனார் எனவும் வழங்குவர்.

வாலீசம்: வாலி பூசித்துப் போரில் எதிர்த்தவர் வலியில் செம்பாதி தன்னையடையப் பெற்றதலம். கச்சி மயானத்திற்குக் கிழக்கதாய் மேற்கு நோக்கியதாய்ச் சித்தர்கள் வழிபடத்தோன்றிய வாயுலிங்கமே அவ்வாலீசமாகும். வாலி இருக்கைக்குக் கொண்டு செல்லப் பெயராது வால் அற்று விழ அதன் வடுப்பெற்று இக்காஞ்சியை விட்டென்றும் நீங்கோரானப் பெருமான் அருளும் சிறப்பினது. (திருவே. 103-120)

கச்சிமயானம்: பண்டன் என்னும் அசுரன் வரத்தினால் தேவர் முதலானோர்தம் உடம்பிற் கலந்து வீரியத்தைக் கவர்ந்துண்டு மெலிவிக்க, இறைவன் உடம்புடைய அனைத்துயிரையும் அவியாக வேள்வியில் இட்டு அவ்வழியாகப் அப்பண்டனை அழித்துப் பண்டுபோற் படைத்தனர். (பண்டு- உடம்பு) கச்சியில் மயானமாய் வேள்வியில் முளைத்தவர் பிரானார் மேற்கு நோக்கிய சந்நிதியாய்த் திருவேகம்பத்தில் கொடிமரத்தின் முன்னே தேவாரம் பெற்றுத் திகழ்வது இத்தலம்.

நல்ல கம்பர்: உருத்திரர் வழிபட்டு போற்ற ஒன்றி நின்றனர். அவரை அன்பொடும் வழிபடுவோர் ஒன்றி ஒன்றா நிலையை எய்துவர். திருவேகம்பர் திருமுன்பு நிலாத்துண்டப் பெருமாளுக்கு அயலே மேற்கு நோக்கி வீற்றிருப்பர். (திருவே. 88)

கள்ளக் கம்பர்: திருமால் உயிர்களை மயக்குறுத்த வழிபட்டமையின் அப்பெயர் ஏற்றனர். இவரை வணங்குவோர் மாலாரின் மயக்குட்படார். அம்மையார் வழிபட்ட மூலஇலிங்கத்திற்கு வடக்கில் உள்ளது இத்தலம். (திருவே. 87)

வெள்ளக் கம்பர்: பிரமன் வெள்ளை (தூய) உள்ளத்தோடும் பூசனை புரிந்தமையின், இப்பெயரைத் தாங்கினர். பிறவியாம் அழுக்குடம்பு போய்த் தூயராவர். இவர் மூல இலிங்கத்திற்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றனர். (திருவே. 86)

இம்முத்தலமும் சுந்தரர் கண்பெற்ற பதிகத்துட் போற்றப் பெற்றுள்ளன.

--[முற்றும்]--


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:20:37(இந்திய நேரம்)