Primary tabs
-
உ
குருபாதம்.முன்னுரை
---
திருச்சிற்றம்பலம்.
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்,
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
திருச்சிற்றம்பலம்.
-திருஞானசம்பந்தர்.
தனக்கென ஒன்று வேண்டும் குறையில்லாது நிறைவுடையோனாகிய
இறைவன் தனக்கு இயல்பாய் உள்ள எல்லையற்ற
பெருங்கருணையாலே, குறைபல உடைய உயிர்களை உய்விக்கத்
திருவுளம் கொண்டே எண்ணற்ற செயல்களை மேற்கொள்ளுகின்றான்.
செயல்களை மேற்கொள்ளுதலால் அவற்றிற்கு ஏற்ற உருவம், பெயர்
என்பவைகளையும் கொண்டு நிற்கின்றான். அங்ஙனம் நின்று
உயிர்கட்கு அவற்றின் தகுதிக்கேற்பப் பல வகையான உடம்புகளைப்
படைத்துக்கொடுத்துப் பலவகையான உலகங்களில் விடுக்கின்றான்.
அவ்வகைகள் பலவற்றினும், உய்தி பெறுதற்கு வாயிலாக அமைவது
நிலவுலகில் மக்களுடம்புடன் வாழும் நிலையேயாம். ஆகவே,
இறைவன் உயிர்கட்கு மக்களுடம்பைக் கொடுத்தலின்குறிக்கோள்,
மனமொழி மெய்களால் அவனை நினைந்தும், வாழ்த்தியும்,
வணங்கியும் அவனது திருவடியை அடைவித்தலேயாகும்.
‘‘மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத்தைந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ’’
என்னும் சிவஞான சித்திச்செய்யுள் இதனை நன்கு விளக்குகின்றது.