தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

9th Thirumurai

மக்கட்குச்சிறந்த    பற்றுக்கோடு என்பது தெளிவு. இதுபற்றித்தான்
நாவுக்கரசரும் மூவகை வழிபாட்டில், “ வாழ்த்த வாயும்” என்பதை
முதற்கண் வைத்து அருளினார்போலும்! மாணிக்கவாசகரும்,
“வாழ்த்துவதும்  வானவர்கள்  தாம் வாழ்வான்” என்றும், “வானாகி
மண்ணாகி,,, ... நின்றாயை என்சொல்லி வாழ்த்துவன் ” என்றும்,
பிறவாறும் அருளிச்செய்தல் காணலாம். இறைவனை மந்திரத்தின்வழிக்
காண்டல் கூடும் என்பது பலரது கொள்கை.  அம்மந்திரமும் ஒருவகை
வாழ்த்தே என்பது மறக்கற்பாலதன்று.

இறைவனை   வாயார வாழ்த்தி அதுவழியாக மனமார நினைத்துத்
தலையாரக்  கும்பிட்டுக்  கூத்தும் ஆடி அவன் அருளைப் பெறுதற்கு
வாயிலாகத்   தமிழ் மொழியில் கடவுள்   வாழ்த்துப்  பாடல்கள்
எண்ணற்றனவாய்     உள்ளன.    அவைகளில்   தலைசிறந்தனவே
திருமுறைகள்.

கடவுள்     வாழ்த்துப்பாடல்களில்  இசைப்பாடலாக  அமைந்தன
சிறப்புடையனவாம்.     ஏனெனில்,     உணர்வை     மிகுவிப்பதில்
இயற்பாட்டினும்     இசைப்பாட்டுக்கள் முன்னிற்கும்.    ஆகவே,
இறையன்பை      மிகுவிப்பன      இசைத்தமிழாய்      அமைந்த
திருப்பாடல்களேயாம்.  ஞானசம்பந்தரும்,  நாவுக்கரசரும் தமது தமது
அருட்பாடல்களை  இசைத்தமிழாக  அருளிச்செய்தது புற மதங்களின்
வளர்ச்சி  காரணமாக  மக்களிடையே மறைந்திருந்த பத்தியுணர்வைத்
தோற்றுவித்தற்பொருட்டேயாகும்.        ‘இன்னும்       இசையால்
துதிப்பவர்கட்கே  இறைவன் பேரருள் புரிகின்றான்; என்று அவர்களே
அருளியிருத்தல்   காணலாம்.  இக்காரணத்தால்தான்  திருமுறைகளில்
தேவாரம் முன்னும், திருவாசகம் பின்னுமாக அமைந்துள்ளன.

முதல்     இராசராசசோழன் வேண்டுகோளை  ஏற்றுப்பொல்லாப்
பிள்ளையாரது  திருவருள்  துணையால் தேவாரத் திருப்பதிகங்களைத்
தில்லையினின்றும்   எடுத்து   அவற்றை  ஏழு  திருமுறைகளாகவும்,
முன்பே  உள்ள திருவாசகம், திருக்கோவையார் என்பவற்றை எட்டாந்
திருமுறையாகவும்  நம்பியாண்டார் நம்பிகள் வகுத்தமைத்தார். தேவார
நெறியைப்     பின்பற்றியே    திருமாளிகைத்    தேவர்   முதலிய
அருளாசிரியர்கள்    திருவிசைப் பாக்களை    அருளிச்செய்தனர்,
ஏழிசையாய் இசைப்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-09-2017 14:56:03(இந்திய நேரம்)