தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thiruthondar Puranam

 
 


சிவமயம்

ஆச்சாபுரத்தில்

பெரிய புராணத்துள் ஆளுடைய பிள்ளையார் புராண
விரிவுரை அரங்கேற்று விழா

திருநின்ற செம்மைபெற்ற பன்னிரண்டாம் திருமறையான
பெரியபுராண விரிவுரையாளர் - உயர்சைவத் திருவாளர் -
சிவக்கவிமனி - கோயம்புத்தூர் - C.K.சுப்பிரமணிய முதலியார்,B.A.,
அவர்களுக்கு

திருநல்லூர்ப் பெருமணம் என்னும் ஆச்சாபுரத்தினிடத்துப்
பெரியபுராண விரிவுரை அரங்கேற்றத்தில் அன்பால் அளித்த

வ ர வே ற் பு உ ரை

சேக்கிழார் மரவிலுதித்த பெரியீர்!
உங்கள் வரவு நல்வரவாகும்; அன்பர்களாகிய நாங்கள் தாய்வரவை எதிர்பார்த் திருக்கும் பறவைப் பார்ப்பேபோல உமது வரவை எதிர்பார்த்திருக்கிறோம்.
சிவநேசச் செல்வரே!
தங்கள் பன்னிரண்டாம் திருமுறையின் விரிவுரையையும், ஆராய்ச்சியையும், நுட்பமான பொருள் விளக்கத்தையும் காணும்தோறும் எங்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சி தங்களைக் காணவேண்டும் என்னும் பற்றை உண்டாக்கியது. அதன் பயனை இப்பொழுது அடைந்ததனால் நாங்கள் மிகவும் மேன்மை பெற்றவர் ஆகின்றோம். ஆகையால் தங்களை மனமகிழ்வோடு வரவேற்கிறோம்.
ஆங்கில அறிஞரே!
தாங்கள் தமிழ்க்கல்வியோடு ஆங்கிலமும் கற்று வல்ல வழக்கறிஞராதலால் தங்கள் பெரியபுராண விரிவுரை பல வகையிலும் உலக இயல்போடு பொருந்தி விளங்குகின்றது கண்டுகளித்த களிப்பால் தங்களை ஒருமுறை இருமுறை மும்முறையாக வரவேற்கின்றோம், வருக! வருக!! வருக!!!
தமிழ் கற்றறிந்த வித்தார கவிஞரே!
தமிழ்ப்புலவர்கள் நூலை விளக்கமாக விரித்து உரை செய்யவும் பேசவும் வல்லவர் வித்தார கவிஞர் என்பர். அதற்கு உதாரணமாகத் தாங்கள் விளங்குதல் கண்டு வியந்த நாங்கள் தங்களை வித்தா கவிஞரே என அழைக்கின்றோம். வித்தார கவிஞரே வருக!
சன்மார்க்கத் தலைவரே!
தங்கள் ஒழுக்கமும் சிவபெருமானிடத்தும் சிவனடியவர்களிடத்தும் பதிந்த தங்கள் உள்ளமும் உண்மை அன்பும் வாய்மையும் சிவத்தொண்டும் இன்சொல்லும் இன்முகமும் கண்டோர் வியக்கும் நிலையில் உள்ளன. தாங்கள் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் சிவஞானமும் பெற்றுத் தமிழ்நாட்டுத் தாயான காவிரி மணலைவிடப் பன்னாள் வாழ்ந்திருக்கும்படி அம்மையை இடப்பால் கொண்ட ஆனந்த நடராசரை வேண்டுகின்றோம்.

சீர்காழி
1-6-50

இங்ஙனம்,
காழிக் கல்விக் கழகத்தார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 18:36:15(இந்திய நேரம்)