Primary tabs
சுவாமி மலையில் உள்ள அறுபது படிகளும் பிரபவ முதல் அக்ஷய ஈறாக உள்ள ஆண்டுகளைக் குறிக்கும் என்று குடந்தைப் புராணம் சுவாமிமலைப் படலத்தில் திரிசிரபுரம் மகாவித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள். தரிசனத்திற்கு வந்தவர்கள் தங்கவும், திருமணம் முதலிய விசேடங்களைச் செய்யவும் தேவஸ்தானத்தார் பல வசதிகளைச் செய்திருக்கிறார்கள்.
பிரதி வியாழக்கிழமை தோறும் மாலையில் சுவாமிநாதப் பெருமான் வைரவேலுடன், தங்க முகக் கவசம் அணிந்து காட்சி தருவார். பிரதி செவ்வாய்க் கிழமை தோறும் மாலையில் சகஸ்ரநாமங்கள் பொறித்த நான்கு சரங்கள் கொண்ட பவுன் சகஸ்ரநாம மாலையும், வைர ஷட் கோணப் பதக்கமும், வைரத்திலகமும் அணிந்து காட்சி தருவார். மற்றுமுள்ள விவரங்களை சுவாமி மலை தேவஸ்தானத்தார் வெளியிட்டுள்ள சுவாமி மலைத் தல புராணத்தில் காணலாம்.
நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் 13 வரிகளில் இத்தலத்தைப் பற்றியும் இங்கு பக்தியுடன் வாழ்கின்ற அந்தணர்களைப் பற்றியும் கூறியுள்ளார்.
இது நான்காம் படைவீடு. அநாகத க்ஷேத்திரம். இதன் பெருமையை அவாமருவி, ஆனன, ஆனாத, சுத்திய, நாசர்தங், நாவேறு, பல காதல், பாதிமதி, மகரகேதன, வாதமொடு, வாரமுற்ற, கோமள வெற்பினை, செகமாயை, விழியால் முதலிய திருப்புகழ்ப் பாடல்களின் பிற்பகுதியில் கண்டு களிக்கவும்.
இத்தகு வித்தகம் நிறைந்த சுவாமிமலை க்ஷேத்திரத்தின் திருப்புகழ் விரிவுரையை ஓதி உணர்ந்து அன்பர்கள் நலம் பெறுக.
இந்த நான்காம் படைவீட்டுத் திருப்புகழ் உரை நூலை வானதி பதிப்பகம் என் அன்பர் திருநாவுக்கரசு இப்போது வெளியிடுகின்றார்.
திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்த்தொண்டு பாராட்டுதற்குரியது. வானதி பதிப்பகம் வாழ்க.
அன்பன்
கிருபானந்தவாரி