தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tiruvillaiyadal Puranam-உரை

காப்பு

       [கலிவிருத்தம்]

சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே.

(இதன் பொருள்.) சத்தியாய் - சத்தியாகியும், சிவம் ஆகி -
சிவமாகியும், தனி - ஒப்பற்ற, பரமுத்தி ஆன - பரமுத்திப்
பேறாகியும் உள்ள, முதலை - முதற் கடவுளை, துதிசெய -
துதித்தற்கு, சுத்தி ஆகிய - தூய்மையவான, சொல் பொருள் -
சொற்பளையும் பொருள்களையும், சித்தி யானைதன் - யானை
முகத்தையுடைய சித்திவிநாயகக் கடவுளின், செய்ய - செம்மையாகிய,
பொன் - அழகிய, பாதம் - திருவடிகள், நல்குவ - அருளுவன
எ - று.

இச்செய்யுள், எடுத்துக்கொண்ட நூல் இனிது முடிதற்பொருட்டுச்
செய்யற்பாலதென ஆன்றோ ரொழுக்கத்தான் அநுமிக்கற் பாலதாய
மங்கலம் கூறவெழுந்தது. மூத்த பிள்ளையாரின் திருவடிகளை
வணங்குதலே இவண் இடையூறு போக்கி நூலினை யினிது
முடித்தற்குக் காரணமாகக்கொண்ட மங்கலமாம்; இது காப்பு எனவும்
படும். இறைவி பிடியுருவு கொள்ள இறைவன் களிற்றுருவு கொண்டு
அருளினமையின் பிள்ளையார் யானைமுகத்துடன் றோன்று
வாராயினர்; இதனையும், பிள்ளையார் வழிபடும் அடியாரின்
இடர்களைதற்கே இறைவனால் அருளப்பட்டவ ரேன்பதனையும்,

"பிடியா னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"

"செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
      சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதவா
யொற்றைச்சேர் முற்றற்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
      கோவாதேவாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
      பேராநோய்தா மேயாமை பிரிவுசெய்த வனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
      காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே"

என்னும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல்களானறிக.
மதுரை யம்பித சத்தி பீடம் அறுபத்து நான்கனுள்
முதன்மையதாகலானும், அருளாகிய சத்தியை யுணர்ந்தே சிவத்தை
யுணரவேண்டு மென்ப வாகலானும், இந்நூலாசிரியர்க்குப் பராசத்தியார்
காட்சி தந்து இதனைப் பாடுமாறு அருள்புரிந்தனராகலானும்
‘சத்தியாய்’ என்று தொடங்கப்பெற்றது. பரமுத்தி - எல்லா
முத்திகளினும் மேலாய முத்தி; திருவடியிற் கலத்தலாகிய முத்தி. வீடு
பேற்றுக்கு ஆதாரமாகிய இறைவனை வீடுபேறெனவே உபசரித்துக்
கூறுவர் ஆன்றோர். சொல்லும் பொருளும் வடிவமான சத்தியும்
சிவமுமாம் முதற்பொருளைத் துதித்தற்குச் சொல்லும் பொருளும்
அருளப்பெறுதல் ஒருதலை யென்பார் ‘சுத்தியாகிய சொற்பொரு
ணல்குவ’ என்றார். (1)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2019 18:40:23(இந்திய நேரம்)