தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thiruvaimozhi - Third Volume


திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
மூன்றாம் தொகுதி
1

முகவுரை

 
தொழும்பாக் கியவினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடைநின்று
எழும்பாக் கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும்பாக் கெழுமிய கீர்த்தியை நாளுங் கிளத்திஎன்னாத்
தழும்பாக் கவும்வல்ல கோசட கோபன் தயாபரனே

 

இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாருடைய அருளிச்செயலாகிய திருவாய்மொழியின் மூன்றாம் பத்திற்கு ‘ஈட்டின் தமிழாக்கம்’ என்னும் பெயரிய உரை, எம் குலக் கொழுந்தாகிய ஆழ்வாருடைய திருவருளால் இப்பொழுது வெளிவருகின்றது. முன்னர் வெளியிட்ட முதல் இரண்டு பத்துகளையும் ஏற்ற தமிழ் உலகம், இதனையும் ஏற்று அடியேற்கு ஊக்கம் அளிக்கும் என்பது அடியேனது துணிவு.

இவ்வுரையை எழுதி வந்த காலத்தும் பதிப்பித்த காலத்தும் ஆங்காங்கு வேண்டிய உதவிகளைச் செய்து உதவிய ஸ்ரீமத் உ. வே. வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரிய ஸ்வாமிகட்கும், பல்கலைக்குரிசில், ஸ்ரீமான், வித்துவான், வே. வேங்கடராஜூலு ரெட்டியார் அவர்கட்கும் அடியேன் கைகூப்பித் தொழும் வணக்கம் உரித்தாகுக!

இந்நூலைச் சென்னைப் பல்கலைக் கழகத்தார் அச்சிடுதற்குக் காரணராயிருந்த சொல்லின் செல்வர், தமிழ்ப்பேராசிரியர், உயர்திரு. ரா. பி. சேதுப்பிள்ளை, B.A., B.L., அவர்கட்கும், தொடர்ச்சியாக வெளியிட்டு உதவிவரும் சென்னைப் பல்கலைக்கழக அதிகாரிகட்கும் அடியேன் என்றென்றும் நன்றி செலுத்துங்கடப்பாடுடையேன்.

 
குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.’

 
 
 சென்னை,

}

இங்ஙனம்,
 
 5-12-53. 
பு. ரா. புருஷோத்தம நாயுடு.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:47:30(இந்திய நேரம்)