தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thiruvaimozhi - Fourth Volume


  • திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
    நான்காம் தொகுதி
    1

    முன்னுரை

     
    இருளாய்ப் பரந்த உலகங் களைவிளக் கும்மிரவி
    பொருளாய்ப் பரந்தது தான்பொது நிற்றலின் மற்றதுபோல்
    மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாறன் எங்கோன்
    அருளாற் சமயமெல் லாம்பரன் உண்டென் றறிவுற்றதே.

    - கம்ப நாடர்

    இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாருடைய
    அருளிச்செயலாகிய திருவாய்மொழியின் நான்காம் பத்திற்கு ‘ஈட்டின்
    தமிழாக்கம்’
    என்னும் பெயரிய உரை எங்குலக்கொழுந்தாகிய ஆழ்வாருடைய
    திருவருளால் இப்பொழுது வெளி வருகின்றது. முன்னர் வெளி வந்த முதல்
    மூன்று பத்துகளையும் ஏற்ற தமிழுலகம் இதனையும் ஏற்று அடியேற்கு ஊக்கம்
    அளிக்கும் என்பது அடியேனது துணிவு.

        ‘அதிரதர் தம்மை எண்ணில் அணிவிரல் முடக்கல் ஒட்டா முதிர்சிலை
    முனி’ என்கிறபடியே, மேதாவிகட்கெல்லாம் மேலாய மேன்மையாளரும், ‘உற்ற
    நோய் நீக்கி உறாமை முற்காக்கும் பெற்றி’யாளரும், பரம
    வைதிககுலதிலகருமான பாரத ரத்நம் சக்கரவர்த்தி
    இராஜகோபாலாசாரியார் அவர்கள்
    , இத்திருவாய்மொழியின் மற்றைய
    பத்துகளும் விரைவில் வெளி வரல் வேண்டும் என்னும் பரம கிருபையால்
    நிர்ஹேதுகமாக, தாம் சென்னை அரசாங்க முதல் அமைச்சராய் இருந்த
    காலத்தில், இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பித்து உதவி செய்தார்கள்; அப்
    பெரியார்க்கு அடியேன் தாளும் தடக்கையும் கூப்பித் தொழும் வணக்கத்தோடு
    என்றென்றும் நன்றி செலுத்துங்கடப்பாடுடையேன்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 17:01:30(இந்திய நேரம்)