தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library


  • 1868 ஆம் வருடம் ஏப்பிரல் மாதம் 18 ஆம் நாள்
    மைலாப்பூரிலுள்ள தேவாலயத்தில் ஹென்றி ஆல்பிரெட் (Henry Alfred)
    என்னும் நாமம் தரித்தவராக ஞானதீக்ஷை பெற்றார். நம் வித்வானுக்கு
    ஞானதீக்ஷை கொடுத்தவர் கனம் ஜான் கெஸ்டு ஜயர், அச்சமயம்
    பிரசங்கம் செய்தவர் கனம் சிம்மண்ட்ஸ் ஐயர். இக்காட்சியைக்
    கண்ணுற்றுப்போக வந்தவர்களின் தொகை அதிகம். நம்
    வித்வானுக்கு இப்போது வயது முப்பது. முப்பது வருஷம் இவர்
    பிடிவாத கொடிய வைஷ்ணவனாயிருந்து பெருமாள் என்னும்
    தெய்வத்துக்கு ஆட்பட்டிருந்தவர். சமயநெறி தவறாதவர், மத
    வைராக்கியமுடையவர். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட
    சங்குசக்கரமாகிய முத்திரையைப் பழுக்கக் காய்ச்சி தன்னிரு
    தோளிலும் சூடு போடப் பெற்றிருந்தவர். இந்நிலைமையிலிருந்து
    தாம் ரட்சிக்கப்பட்ட காலத்தில் அவரது மன நிலைமையை
    அவர் பாடிய கீழ்வரும் கவியில் காணலாம்.
     
               பிறவியில் பிடிவாத கொடியவைஷ் ணவனாய்ப்
                   பிறந்து முப்பது வற்சரம்
              பிரபஞ்ச மயல்கொண்டு மூடாந்த காரப்
                   பிழம்பில் அடைபட் டுழன்று
              மறவினைக் காளாகி நெறிநிலாத் தூர்த்தமன
                   வாஞ்சைக் கிடங்கொடுத்து
              மருளுற்று வறிதுநாள் செலவிட்ட நீசன்எனை
                   மலரடிக் காட் படுத்தி
              குறைவிலாப் பேரரு ளளித் தின்றுகாறும்
                   குறிக்கொண்டு காத்தி யெனினும்
              கொச்சைமதி யேற்கின்னும் நன்றியறியாக் கெட்ட
                   குணதோஷம் ஒழியவிலையே
              இறைவலப் புறமிருந் தடியருக்காப் பரிந்
                   தென்றுமன் றாடு முகிலே
              ஏக நாயக சருவ லோக நாயக கிறிஸ்
                   தியேச நாயக ஸ்வாமியே.

    இரக்ஷிப்பு என்பது ஒரு மதம்விட்டு இன்னொரு மதம்
    புகுவதல்லவென்பது கிருஷ்ணபிள்ளை நன்கறிந்த விஷயம்.
    அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில்
    கூறியபடி ரக்ஷிப்பு என்பது ஓர் புதிய நிலைமை என்பதை
    உணர்ந்தார். அது மரணத்தினின்று ஜீவனுக்கு வருவதுபோலவும்,
    இருளிலிருந்து வேளிச்சத்துக்குள் பிரவேசிப்பதுபோலவும்,
    பிசாசின் அடிமைத்தனத்தினின்று தேவ புத்திரத்தன்மையை
    அடைவதுபோலவும் இருக்கின்றது என்பது நம் வித்வானின்
    கருத்து. இதைக்குறித்து ரக்ஷணிய மனோகரத்தில் அவர்
    அனுபவார்த்தமாகக் கூறுவதாவது :

              

               ஆகாமியத்திலே செத்துக் கிடந்த எனை
                   ஆவியில் உயிர்ப் பித்தனை
              அஞ்ஞான இருளுடு கண்கெட் டலைந்த வெற்
                   கவியாத ஒளி காட்டினை
              மாகாதகப் பேயின் அடிமையாய்ப் போன எனை
                   வலியப் பிடித்திழுத்துன்
              மகிமைக் குயர்த்திக் கிறிஸ்துவுக்குள் எனையும்
                   மைந்தனாப் பாவித்தனை

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:21:52(இந்திய நேரம்)