தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


முதலியவர்கள் தலையை வெட்டினார்; இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான்; மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு ஓடினர். பின்னர், தக்கன் இழந்த தலைக்காக ஆட்டுத்தலையை வைத்து அவனை உயிர்ப்பித்தருளினார்.   

25. தடாதகைப் பிராட்டியார் திருமணம்: தென் நாடு செய்த தவத்தால் உமாதேவியார் பாண்டியர் குலத்தில் பிறந்து, தடாதகை என்னும் பெயர் தாங்கி, கன்னி நாட்டு அரசியாகத் திகழ்ந்து, தன் வீரத்தால் உலகம் எல்லாம் வென்று, கயிலைக்குச் சென்று, சிவகணங்களை எல்லாம் வென்று, சிவபெருமானோடு நேரில் போருக்கெழுந்த சமயத்தில், தன் நிலைமையும் தலைவன் நிலைமையும் உணர்ந்து, கன்னி நாடு திரும்பி வந்து, சிவபெருமானை மணந்து, தன் ஆட்சியை அவரிடம் ஒப்புவித்தார். உக்கிரப்பெருவழுதி என்னும் பெயருடன் கூடிய முருகப் பெருமானைப் பிள்ளையாகப் பெற்றார். பின்னர் பாண்டி நாட்டு அரசுரிமையை மகனிடம் ஒப்புவித்து, பெருமானும் பிராட்டியும் திருவாலவாய்த் திருக்கோயிலுள் மறைந்தனர்.     

26. தயரதன் மகன்: திருமால் தயரதன் மகனாகத் தோன்றி, விசுவாமித்திரன் வேள்வியை முற்றுவித்து, கௌதமர் சாபத்தால் கல்லான அகலிகைக்கு விடுதலை அளித்து, மிதிலையில் வில் முறித்து, அம் மிதிலை மன்னன் மகளை மணந்து, பரசுராமன் வலியை அடக்கி, சிற்றன்னை விருப்பால் தானும் சீதையும் தம்பியுமாகக் காடு சென்று, குகன் நதியைக் கடத்துவிக்க அப்பாற் சென்று, வனத்தில் எதிர்ந்த கரன், மாரீசன், முதலிய அரக்கர் உயிர்களைப் போக்கி, அங்கு மாயத்தால் இராவணன் தன் மனைவியைக் கவர்ந்து செல்ல, தம்பியும் தானும் தேடிச் செல்லும் வழியில், சடாயுவுக்கு உத்தரக் கிரியைகள் செய்து, சூரிய புத்திரனாகிய சுக்கிரீவனோடு நட்புக் கொண்டு, ஏழு மராமரத்திற்கும், வாலிக்கும், கடலுக்கும், ஒவ்வோர் அம்பு தொடுத்து, கடலை அடைந்து, இலங்கை சென்று, இராவணனை அடியோடு வீழ்த்தி, மனைவியை மீட்டு, அயோத்தி வந்து, அரசு புரிந்திருந்து, பின் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினார்.     

27. தருமிக்குப் பொற்கிழி அளித்தது: பாண்டியன் ஒருவன், தன் உள்ளக் கருத்தினை விளக்கி எழுதும் கவிக்குப் பெரும் பரிசு அளிப்பதாகச் சங்கப் புலவரிடம் கூறி, ஒரு பொன் முடிப்பைப் பரிசுப் பொருளாகச் சங்க மண்டபத்தில் வைத்தான்; அவன் உள்ளக்கருத்து எது என்பது தெரியாது புலவர்கள் எல்லோரும் மயங்கினார்கள். அப்பொழுது வறுமையால் வாடிய தருமி என்பானுக்கு 'கொங்கு தேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் ஒரு செய்யுளைக் கொடுத்து, அதன் வழி அவன் பரிசு பெற்று வறுமை நீங்குமாறு இறைவன் அருள் செய்தார். புலவரெல்லாம் ஒப்ப மகிழ்ந்து அச் செய்யுளே ஏற்புடைத்தெனக் கூறினார்கள். ஆனால் நக்கீரன் அச் செய்யுள் பொருட் குற்றமுடையதெனக் கூறி, சிவபெருமான் நெற்றிக்கண்ணுக்கும் அஞ்சாது சாதித்தான்.     

28. தாருகாவன முனிவர்களின் வேள்வி: தாருகாவனத்திலிருந்த முனிவர்களும் அவர்களுடைய பெண்டிரும் தெய்வ உணர்ச்சி வேண்டுவதில்லை என்றும், சில நெறிகளையும் கடமைகளையும் மேற்கொண்டு வாழ்வதே போதுமானதென்றும், வாழ்ந்து வந்தார்கள். தெய்வ உணர்ச்சியில்லாத நெறிமுறைகள் நிலையற்றன என்பதை அவர்கட்கு அறிவுறுத்த வேண்டி, சிவபெருமான் பிச்சைத் தேவர் கோலங்கொண்டு, அழகிய வடிவில் அவ்விடம் சென்று ஐயம் ஏற்றார். அவருடைய வடிவழகைக்கண்ட முனிவரின் பெண்டிர் தங்கள் நிலையினின்றும் கலங்கினர். அதுகண்ட முனிவர்கள் சிவபெருமானை எதிர்த்து, ஒரு தீய வேள்வியைத் தொடங்கினர். அவ்வேள்வியினின்றும் தோன்றிய புலி, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் சிவபெருமானைக் கொல்லுமாறு ஏவினர். அவ்வாறே அவை சென்று ஆற்றல் இல்லாதனவாகிச் சிவபெருமானுக்கு ஆடையாய், அணியாய், கருவியாய், ஆளாய் அடைக்கலம் புகுந்தன. இறுதியாக


புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 22:29:54(இந்திய நேரம்)