தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கல்லாடத்துள் வரும் கதைக் குறிப்புக்கள்


1. அகத்தியர்: ஒரு முனிவர்; இவரைப் பற்றிப் பல கதைகள் நம் நாட்டின் பல பாகங்களிலும் வழங்குகின்றன. தேவர்களை வருத்திய விருத்திராசுரன் என்பவன், இந்திரனுடைய வைரப் படைக்குப் பயந்து கடலில் ஒளிந்திருந்த போது, அவனைப் பிடிப்பதற்காகக் கடல் நீரை வற்றச் செய்ய வெண்டுமெனத் தேவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இயைய, கடல் நீரைக் குடித்துக் கடலை வற்றச் செய்து, மீண்டும் நிறையச் செய்தவர். சிவபெருமானுக்கு உமையம்மையோடு திருமணம் நிகழ்ந்த காலத்தில், தேவர்கள் எல்லாரும் வட திசையில் ஒன்று சேர்ந்தமையால், அத் திசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது; இந்த ஏற்றத் தாழ்வைச் சமன் செய்வதற்காகச் சிவபெருமான் அகத்தியரைத் தென் திசைக்குச் செல்லும்படி கட்டளையிட்டார்; அக் கட்டளையை மேற்கொண்டு தென் திசைக்கு வரும் வழியில், வானளாவி வழி தடுத்து நின்ற விந்த மலையைத் தணியச் செய்தார். இவருடைய கரகத்திலிருந்த நீரை, மூத்த பிள்ளையார், காக்கை வடிவில் சென்று, கவிழ்த்துவிட, அது 'காவிரி' என்னும் ஆறாகப் பெருகியது. இவர் சிவபெருமானிடத்தும், முருகனிடத்தும், சூரியனிடத்தும், தமிழ் மொழியைக் கற்றார். பொதியமலையையும் பொருநையாற்றையும் தமக்கு உரிமையாகப் பெற்றவர். இராவணனைத் தென்னாட்டிலிருந்து வெளியேறச் செய்தார். முதற் சங்கத்திலும் இடைச் சங்கத்திலும் புலவராகத் திகழ்ந்தார். 'அகத்தியம்' என்ற ஒரு பெரிய தமிழ் இலக்கணத்தைத் தோற்றி, பன்னிரண்டு மாணவர்களுக்கு, சிறந்த தமிழ்ப் புலமையை உண்டாக்கியவர். இவர் செய்தனவாகச் சில நூல்கள் இக்காலத்தும் உலாவுகின்றனவெனினும், அவையெல்லாம் இவர் செய்தனவல்ல என்பது அறிஞர் துணிபு.

    2. அகப்பொருள் அருளியது: முன்பு ஒரு காலத்தில், தமிழ் நூற் பரப்பில், அகப்பொருள் இலக்கணம் அருகியது; பாண்டியனும் சங்கப்புலவரும் வருந்தினார்கள்; அப்பொழுது சிவபெருமான் ஒரு புலவராக வந்து, 'அன்பின் ஐந்திணை' என்று தொடங்கி, அறுபது சூத்திரங்களில் ஓர் அகப்பொருள் இலக்கண நூலை அமைத்துக் கொடுத்தார்; அந்த நூல், வேத வழக்கையும், உலக வழக்கையும், உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களையும், ஒரு வகையாகச் சேர்த்து, தமிழுக்கே உரிய ஐந்திணை இலக்கணத்துக்கு மாறுபடாமலும், வேண்டும் இடங்களில் வடமொழிப் புணர்ச்சி விதிகளை ஏற்றுக்கொண்டதாகவும் இருந்தது. தமிழ் முனிவராகிய அகத்தியனாரும், பாண்டியனும், நாற்பத்தொன்பது சங்கப் புலவர்களும், கடலிலிருந்த அமுது கரைக்கு வந்ததென மகிழ்ந்து தேறினார்கள்.

     3. அயன் தலையைக் கொய்தது: திருமாலுடைய உந்திக் கமலத்தில் தோன்றிப் படைப்புத் தொழிலைச் செய்துவரும் அயனுக்கு, ஆதியில், சிவபெருமானைப் போல் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு காலத்தில், அவன் ஆணவம் கொண்டு சிவபெருமானை வணங்காது நின்றான். சிவபெருமானுடைய ஆணையால் வைரவக் கடவுள் அவனுடைய ஐந்தாவது தலையைத் தன் நகத்தால் கிள்ளிக் கொய்து, பலி கொள்ளும் திருவோடாகக் கையில் ஏந்தி, தேவர்களுடைய குருதியைப் பலியாகப் பெற்று, பிரமன் உள்ளிட்ட தேவர்களுடைய ஆணவத்தைப் போக்கினார்.

     4. அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளியது: பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காகத் தெய்வப் படைக் கலங்களைப் பெற வேண்டித் தவம் செய்து கொண்டிருந்த அருச்சுனன் முன்னிலையில் வேடன் வடிவில் சிவபெருமான் தோன்றி, ஒரே சமயத்தில் ஒரு பன்றியைத் தாமும் அருச்சுனனுமாக எய்து வீழ்த்தி, அதனால் மாறுகொண்டு, இருவரும் ஒருவரோடொருவர் போர் செய்து, அருச்சுனன் வில்லால் அடித்த தழும்பினை ஏற்று, பின்னர், தம் தெய்வக் காட்சியோடு அவனுக்குப் பாசுபதக் கணையையும் அம்பறாத் தூணியையும் அருளினார்.

     5. இடைக்காடர்: இடைக்காடர் என்னும் சங்கப் புலவரின் இனிய செய்யுட்களைப் பாண்டியன் பாராட்டாது பராமுகமாக இருந்ததால், அப் புலவர் உள்ளம் உடைந்து, ஆலவாய் அண்ணலிடம் முறையிட்டுக் கொண்டு, மதுரையைவிட்டு அகன்று, வடபுறமாய் வைகையின் தென் கரையில் தங்கினார். ஆலவாய் அண்ணலும் ஏனைய சங்கப் புலவர்களும் இடைக்காடரிடம் பரிவு கொண்டு, மதுரையை விடுத்து இடைக் காடர் தங்கிய இடத்திற்கே சென்று தங்கி விட்டார்கள். இது கண்டு, தன் பிழைக்காக வருந்தி, பாண்டியன் ஆலவாய் அண்ணலையும் சங்கப் புலவர்களையும் வணங்கி, இடைக்காடருடன் எல்ரோரையும் மதுரைக்கு அழைத்து வந்து, சிறப்புச் செய்தான்.

     6. இந்திரன் பழி தீர்த்தது: இந்திரன் ஒரு காலத்தில், தான் இயற்றிய வேள்விக்குத் தொடர்புடையவனாக இருந்த விச்சுவவுருவனைக் கொன்றமையால், குரவனைக் கொன்ற பெரும் பழியால் பற்றப் பெற்றான். அப் பெரும் பழி எவ்வித முயற்சியாலும் அகலாது துன்புறுத்திக்கொண்டே வந்து, அவன் மதுரையை அடைந்த அளவிலேயே விலகுவதாயிற்று. இந்திரன் ஆலவாய் அண்ணலின் பேரருளை வியந்து, எட்டு யானைகளின் பிடரிகளின்மேல் அமையப் பெற்ற ஒரு பேரழகு வாய்ந்த விமானத்தைத் தேவருலகிலிருந்து கொணர்ந்து, சோமசுந்தரக் கடவுளுக்கு அமைத்து வழிபாடு செய்தான்.

     7. இந்திரன் மலைகளின் சிறகை அரிந்தது: ஒரு காலத்தில் மலைகள் எல்லாம், சிறகு உடையனவாக இருந்தது, மனம் போனபடி பறந்து சென்று, உலகுக்குப் பெரிய துன்பத்தை விளைவித்து வந்தன. அந்தத் துன்பத்தைப் போக்க வேண்டி, மலைகள் பறந்து நிலை பெயரா வண்ணம், அவற்றின் சிறகுகளை இந்திரன் அரிந்துவிட்டான். அப்போது இரத்தம் சிந்திய இடங்களில் பவளம் உண்டாயினவாம்.

     8. இராவணன் கயிலையை எடுத்தது: ஒரு காலத்தில் இராவணன் கயிலை மலைக்குச் சென்று, தன் தோள்வலிமையை எண்ணி இறுமாந்து, அம் மலையை எடுக்க முயன்ற போது, அதன் முடியில் வீற்றிருந்த சிவபெருமான், தன் திருவடி விரல் ஒன்றால் அழுத்த, அம் மலையின் அடியில் நெரிபட்டு, பல காலம் கதறி அரற்றி, பின்னர், சாம கானம் பாடி, சிவபெருமானை மகிழ்வித்து, விடுதலைப் பெற்றான். 

    9. உக்கிரபாண்டியன் கடலில் வேல் விட்டது: முருகப் பெருமான் தடாதகைப் பிராட்டியாரின் திருமகனாகத் தோன்றி, உக்கிரபாண்டியன் என்னும் பெயருடன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வரும் காலத்தில், இந்திரனுடைய சூழ்ச்சியால், கடல் பொங்கிக் கரை கடந்து, மதுரை மாநகரைச் சூழ்ந்து அழிக்க எழுந்தது; அப்போது சீற்றத்துடன் பொங்கிவந்த கடலின்மேல், உக்கிரன் வேலை எறியவே, வேல் நுனி படுவதற்கு முன்பேயே கடல் வற்றி வணங்கிப் பின் செல்வதாயிற்று.

     10. உமை சிவபெருமான் கண்ணை மூடியது: ஒரு காலத்தில், விளையாட்டாக, உமையம்மையார் சிவபெருமானுடைய திருக் கண்களைத் தம் வளையலணிந்த கைகளால் மூடியதால், எல்லா உலகிலும் உள்ள எல்லா ஒளிகளும் மறைய, எங்கணும் இருள் மூடிற்று. அப்போது, உலக இருளைப் போக்க வேண்டி, திருவருளால் சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணை நெற்றியில் தோற்றுவித்தார்.

    11. கண்ணன் ஆடை கவர்ந்தது: கண்ணன் இளமையில் ஆயர்பாடியில் வளர்ந்தபொழுது, ஆயர் சிறுமியருடன் விளையாடியும், அச் சிறுமியர் நீராடும்போது கரையில் வைத்துச் செல்லும் அவர்களுடைய ஆடைகளைக் கவர்ந்தோடியும் மகிழ்ந்து வந்தான்.

     12. கருங்குருவிக்கு அருள் செய்தது: முன்னைய தீவினையினால் காக்கைகளால் நலியப் பெற்று அஞ்சி வாழ்ந்த கருங்குருவி ஒன்று, மதுரையை அடைந்து, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி, ஆலவாய் அண்ணலை வழிபட்டு, அவ் இறைவனால் மூன்று எழுத்தாலாய ஒரு மறை அறிவுறுத்தப் பெற்று, முறைப்படி ஓதி, தன் இனத்துடன் வலிமை பெற்றது.

     13. கருப்பைக்கு அருளியது: திருமறைக் காட்டில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில், இரவில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கு தூண்டுவார் இல்லாதபடியால் ஒளிகுன்றி நின்று விடக் கூடிய நிலைக்கு வந்தபோது, அவ் விளக்கில் உள்ள நெய்யை உண்ணுவதற்காக வந்த எலி ஒன்றால் விளக்கு தூண்டப்பெற்று ஒளி பெருகியதைக் கண்டு மகிழ்ந்த இறைவன், 'இந்த எலி பதினான்கு உலகமும் ஆளும் அரசனாகுக' என அருள, அந்த எலி 'மாவலிச் சக்கரவர்த்தி'யாகப் பிறந்து, பேரரசு புரிந்தது.

    14. கல்லானைக்குப் கரும்பு அருத்தியது: பாண்டியன் ஒருவன் இறைவன் திருக்கோயிலை வணங்கச் சென்ற போத ஒரு சித்தரைக் கண்டு, அவருடைய ஆற்றலைச் சோதிக்க எண்ணி, தன் முன்னிருந்த கரும்பை அங்கிருந்த கல்லால் செய்த யானையிடம் கொடுத்து உண்ணச் செய்ய இயலுமோ எனக் கேட்டான்; அந்தச் சித்தர் உடனே அந்தக் கரும்பை உண்ணச் செய்ததோடு அவன் அணிந்திருந்த முத்து மாலையையும் பறித்து விழுங்கவும், உமிழவும் செய்து மறைந்தார்: அவர் சிவபெருமானே என பாண்டியன் தெரிந்து, திருவருளை வணங்கி வாழ்த்தினான்.

     15. காமனை எரித்தது: தேவர்கள் விரும்பிய வண்ணம் சிவபெருமான் மோன நிலையைக் கலைப்பதற்காக, காமன் சிவபெருமான் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அப் பெருமான் ஒருசிறிது தம் நெற்றிக் கண்ணை விழிக்கவும், அக் கண்ணிலிருந்து வந்த அனலால் அவன் எரிந்து சாம்பல் ஆயினன்.

     16. காரைக்கால் அம்மையார்: காரைக்கால் அம்மையாரின் செயற்கருஞ் செயலைக் கண்டு அஞ்சி, அவர் கணவன் புறக்கணிக்கவே, அம்மையார் கணவனுக்கென எடுத்த எழில் உடல் தனக்கு வேண்டுவதில்லை எனத் தம் எழில் எல்லாம் உகுத்துப் பேய் வடிவங் கொண்டு, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள்தோறும் சென்று வழிபட்டு, இறுதியாகத் திருவாலங்காட்டில் இறைவன் திருநடனத்தைக் கண்டு, பேரானந்தம் உற்று, என்றும் அத் திருநடனத்தையே காண வேண்டுமென்ற ஆராத காதலுடன் திருவருளில் கலந்தார்.

    17. காலனை உதைத்தது: பதினாறு ஆண்டுகளே தம் வாழ்நாளின் எல்லையாகப் பெற்ற மார்க்கண்டேயர், சிவபெருமானை வழிபட்டு, தாம் காலனுக்கு அஞ்சவேண்டுவதில்லை என்ற வரத்தைப் பெற்றார். இவ் வரத்தை நோக்காது, முன் விதித்த வாழ் நாள் முடிவில், மார்க்கண்டேயர்மேல் பாசத்தை வீசிய எமனை, சிவபெருமான் உதைத்துச் தள்ளித் தம் அடியவர்க்கு நிலையான வாழ்வை அருளினார்.

    18. கொக்கிறகு சூடியது: முன் ஒரு காலத்தில் ஓர் அசுரன் மிகுந்த ஆற்றலும் வலியும் உடையவனாகிக் கொக்குருவங் கொண்டு, வானவர்களுக்குப் பேரிடர் செய்து, இந்திரன், நான்முகன் முதலியோர் வசிக்கும் இடங்களை எல்லாம் அழித்து வந்தான். வானவர்கள் வேண்டச் சிவபெருமான் அக்கொக்கைக் கொன்று, அதன் இறகை வெற்றிக்கு அறிகுறியாக அணிந்து கொண்டார்.

    19. கொடுமரக் கிராதன்: வில் தாங்கிய வேடன் என்னும் பொருள்படும் இச் சொல் கண்ணப்பரைக் குறிக்கும். கண்ணப்பர் வேடர் குலத்தினர்; காளத்தி மலைக்கு அருகில் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றிருந்தார்; அப்பொழுது தற்செயலாகக் காளத்திநாதர் திருவுருவை மலை உச்சியில் கண்டு, அவரிடம் ஈடுபாடு கொண்டார்; மெய்யன்பினால் வழிபட்டார்; வழக்கமாக அங்குச் சிவகோசரியார்


புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 22:30:39(இந்திய நேரம்)