Primary tabs
கரு மணி கொழித்த தோற்றம் போல,
இரு கவுள் கவிழ்த்த மதநதி உவட்டின்
வண்டினம் புரளும் வயங்கு புகர் முகத்த!
செங் கதிர்த் திரள் எழு கருங் கடல் போல,
பெரு மலைச் சென்னியில் சிறுமதி கிடந்தென,
கண் அருள் நிறைந்த கவின் பெறும் எயிற்ற!
ஆறு-இரண்டு அருக்கர் அவிர் கதிர்க் கனலும்,
வெள்ளை மதி முடித்த செஞ் சடை ஒருத்தன்
தென் கீழ்த் திசையோன் தெறுதரு தீயும்,
ஊழித் தீப் படர்ந்து உடற்றுபு சிகையும்,
பாசக் கரகம் விதியுடை முக்கோல்
முறிக்கலைச் சுருக்குக் கரம் பெறு முனிவர்
நிலை விட்டுப் படராது காணியில் நிலைக்கச்
சிறு காற்று உழலும் அசை குழைச் செவிய!
ஆம்பல்-முக அரக்கன் கிளையொடு மறியப்
பெருங் காற்று விடுத்த நெடும் புழைக் கரத்த!
இடம் கொள் ஞாலத்து, வலம் கொளும் பதத்த!
குண்டு நீர் உடுத்த நெடும் பார் எண்ணமும்,
எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும்,
அளந்துகொடு முடித்தல் நின் கடன் ஆதலின்--
போக்கு வழி படையாது உள் உயிர் விடுத்தலின்
அறிவு புறம்போய உலண்டு-அது போல,
கடல்-திரை சிறுக மலக்கு துயர் காட்டும்
உடல் எனும், வாயில், சிறை நடுவு புக்கு,
ஆரணம் போற்றும் நின் கால் உற வணங்குதும்--
கால் முகம் ஏற்ற துளை கொள் வாய்க் கறங்கும்,
விசைத்த நடை போகும் சகடக் காலும்,
நீட்டி வலி தள்ளிய நெடுங் கயிற்று ஊசலும்
குறை தரு பிறவியின் நிறை தரு கலக்கமும்,
என் மனத்து எழுந்த புன்மொழித் தொடையும்,
அருள் பொழி கடைக்கண் தாக்கி,
தெருள் உற, ஐய! முடிப்பை, இன்று, எனவே.
முடங்குளை முகத்துப் பல் தோள் அவுணனொடு,
மிடை உடு உதிர, செங்களம் பொருது;
ஞாட்பினுள் மறைந்து, நடுவு அறு வரத்தால்;
வடவை நெடு நாக்கின் கிளைகள் விரிந்தென்ன,
கிடந்து எரி வடவையின் தளிர்முகம் ஈன்று,
திரை எறி மலைகளின் கவடு பல போக்கி,
கல் செறி பாசியின் சினைக்குழை பொதுளி,
அகல்திரைப் பரப்பின், சடை அசைந்து அலையாது,
ஓர் உடல் இரண்டு கூறுபட விடுத்த
அழியாப் பேர் அளி உமை கண்ணின்று
தன் பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த,
அமையா வென்றி அரத்த நெடு வேலோய்!
கூறு இரண்டு ஆய ஒரு பங்கு எழுந்து
மாயாப் பெரு வரத்து ஒரு மயில் ஆகி,
புடவி வைத்து ஆற்றிய பல் தலைப் பாந்தள்
மண் சிறுக விரித்த மணிப் படம் தூக்கி,
மணி நிரை சிந்தி மண் புக அலைப்ப;
கார் விரித்து, ஓங்கிய மலைத்தலைக் கதிர் என,
ஓ அறப் போகிய சிறை விரி முதுகில்,
புவனம் காணப் பொருளொடு பொலிந்தோய்!
மின்னன் மாண்ட கவிர் அலர் பூத்த
சென்னி வாரணக் கொடும் பகை ஆகி,
தேவர் மெய் பனிப்புற வான் மிடை உடுத்திரள்
பொரியின் கொறிப்ப, புரிந்த பொருள் நாடித்
ஒருமையுள் ஒருங்கி, இரு கை நெய் வார்த்து,
நாரதன் ஓம்பிய செந்தீக் கொடுத்த
திருகு புரி கோட்டுத் தகர் வரு மதியோய்!
முலை என இரண்டு முரண் குவடு மரீஇக்
செங் கண் குறவர் கருங் காட்டு வளர்த்த
பைங் கொடி வள்ளி படர்ந்த புய மலையோய்!
இமயம் பூத்த சுனை மாண் தொட்டில்
அறிவின் தங்கி, அறு தாய் முலை உண்டு
வணங்கி நின்று ஏத்த, குரு மொழி வைத்தோய்!
'ஓம்' எனும் எழுத்தின் பிரமம் பேசிய
நான்மறை விதியை, நடுங்கு சிறை வைத்து,
படைப்பு முதல் மாய, வான்முதல் கூடித்
கூடம் சுமந்த நெடு முடி நேரி
விண் தடையர், மண் புகப் புதைத்த
குறுமுனி தேற, நெடு மறை விரித்தோய்!
ஆறு திரு எழுத்தும் கூறு நிலை கண்டு,
மணிக்கால் அறிஞர் பெருங் குடித் தோன்றி,
இறையோன் பொருட்குப் பரணர் முதல் கேட்ப,
பெருந் தமிழ் விரித்த அருந் தமிழ்ப் புலவனும்,
பாய் பார் அறிய, நீயே: ஆதலின்,
குழந்தை அன்பினொடு சென்னிதலைக் கொள்ளுதும்
அறிவு நிலை கூடாச் சில் மொழி கொண்டு,
கடவுள் கூற உலவா அருத்தியும்,
சனனப் பீழையும், தள்ளாக் காமமும்,
தென்புலக் கோமகன் தீத் தெறு தண்டமும்,
நரகொடு துறக்கத்து உழல்வரு பீழையும்
நீளாது இம்பரின் முடித்து,
மீளாக் காட்சி தருதி, இன்று எனவே.