தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-பூண்ட - 3



 

கட்டளைக் கலித்துறை.

பூண்ட அரவ மதியை உணாது புரந்தருளும்
ஆண்ட வரவம் புரிவார் செயலை அழித்துவக்கும்
தாண்ட வரவர் இணையடித் தாமரை தஞ்சமென
வேண்ட வரமளிப் பார்கச்சி அன்பர்க்கு மெய்யரணே.                  (3)

(இ-ள்) பூண்ட அரவம் - சடையில் அணிந்த பாம்பானது, மதியை - (அச் சடையில் அணிந்த) பிறைத் திங்களை, உணாது - விழுங்காதபடி, புரந்தருளும் - பாதுகாக்கும், ஆண்டவர் - நம்மை அடிமையாகக் கொண்டவர், அவம் புரிவார் - தீமை செய்பவரது, செயலை அழித்து - செய்கையை ஒழித்து, உவக்கும் - மகிழ்கின்ற, தாண்டவர் - நடனஞ் செய்பவர் ஆவர்; அவர் - அவரது, இணையடித் தாமரை - இரண்டு திருவடிகளாகிய தாமரைகளை, தஞ்சமென - அடைக்கலமாக, வேண்ட - வேண்டிக்கொள்ள, வர மளிப்பார் - வரத்தை அளிப்பாரது, கச்சி - கச்சியானது, அன்பர்க்கு - அன்புடைய அடியவர்கட்கு, மெய் அரண் - உண்மையான பாதுகாவலாம்; (‘தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே’. தொல்-இடை-கஅ. எண்மையாவது எளிமை; ஆவது அடைக்கலம்) அடித்தாமரை என்றது அடிகளாகிய தாமரை மலர் என்ற பொருளில் உருவகமாம்.  தாமரை அடி எனமாற்றித் தாமரைமலர் போன்ற அடி என்று பொருள் கொள்ளுங்கால் உவமையாம்.  உவமையணியாகக் கொள்ளுங்கால் அடிகளைப் போற்றுதல் என்று வருதலால் நேராக அடிகளுக்கு அடைக்கலம் என்ற பொருட் சிறப்பு உண்டு என்பர்; உருவகமாகக் கொள்ளுதலால் தாமரைகட்கு அடைக்கலம் என்று வருதலால் பொருட் சிறப்பு இல்லை என்பர்.  இவர், “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்(து) ஒன்றென மாட்டினஃ(து) உருவகமாகும்” என்பதை உணர்வார்களாயின் உருவகத்திலும் அடிகளுக்கே அடைக்கலம் என்பது பொருந்தும் என உணர்வார்கள்.

 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:15:49(இந்திய நேரம்)