Primary tabs
இடும்பை போம் வழி
அறுசீர் ஆசிரிய விருத்தம்
புயங்கப் பணியார், புவியுண்ட
புனித விடையார், புரையின்மதி
தயங்கப்
பணியார் சடையாளர்,
தயையின் சாலை தனைநிகர்வார்
இயங்கப்
பணியார் புரமெரித்த
ஈசர், கச்சி யிடையமர்ந்தார்;
மயங்கப்
பணியார் அவர்திருத்தாள்
வணங்கீர் இடும்பை வற்றிடவே. (5)
(இ-ள்) புயங்கம் - பாம்பை, பணியார் - அணிகலனாக உடைய வரும், புவி உண்ட - உலகத்தைப் பிரளயகாலத்தில் விழுங்குகின்ற, புனித விடையார் - தூய திருமாலான இடபத்தை உடையவரும், புரையில் மதி - குற்றமில்லாத சந்திரனும், தயங்கு - விளங்குகின்ற, அப்பு - கங்கையும், அணி ஆர் - (ஆகிய இவற்றாலான) அழகுநிறைந்த, சடையாளர் - சடையை உடையவரும், தயையின் சாலைதனை - கருணையோடுகூடிய (உணவு அளிக்கும்) அறச்சாலையை, நிகர்வார்-ஒத்தவரும், பணியார் - பகைவரது, இயங்கு - உலவுகின்ற, அ புரம் எரித்த - அந்தத் திரிபுரங்களை எரித்த, ஈசர் - தலைவரும், கச்சியிடை யமர்ந்தார் - காஞ்சி எனும் பதியில் எழுந்தருளி யுள்ளவரும், மயங்கப் பணியார் - தம் அடியார்கள் செய்திகளில் மயங்கும்படி செய்யாதவருமாகிய, அவர் - அவ்வேகாம்பரநாதரது, திருத் தாள் - அழகிய திருவடியை, இடும்பை வற்றிட - (பிறவித்) துன்பம் நீங்கிட, வணங்கீர் - வணங்குங்கள் (எ-று.)
புரையின் மதி என்பது புரையினையுடைய (குற்றத்தினையுடைய) சந்திரன் எனினுமாம். குற்றத்தினையுடைய மதியைக் குற்றம் போக அணிந்தான் என்க.
வணங்கீர் - வணங்கமாட்டீர்; என்ன மதியீனம் எனினுமாம். வணங்கீர் - எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது.