Primary tabs
எண்சீர் ஆசிரியச் சந்தத் தாழிசை.
மகிழார
மாவாரை மணமேவ விழைவாய்
மணியார மரவேயின் மலைபச்சை உடையே,
இகழீம
மிசைபாடி நடமாடும் இடமாம்,
இகவாத தொழிலையம், இல்வாழ்வார் மலையின்
மகவாய
ஒருநீலி, மறைவுற்ற சலத்தாள்,
வரமைந்தன் ஒருமாதின் வழிநின்ற திருடன்,
தகவீது
தெரிகாதல் ஒழிவாயென் உரைகேள்
தரைமீதெந் நலமெய்தி மகிழ்வாய்மின் னரசே. (12)
(இ-ள்) மகிழ் ஆர - மகிழ்ச்சி நிறையும்படி, மாவாரை - மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவரை, மணம் மேவ - கூடியிருக்க, விழைவாய் - விரும்புவாய், மணி - மாணிக்கமாலையும், ஆரம் - முத்துமாலையும் உடைய, மர வேயின் மலைபச்சை உடைய - மரங்களையும் மூங்கிலையும் உடைய பசுமையான மலைமகளை உடைய தான், இகழ் ஈமம்மிசை பாடி - இகழத்தக்க சுடுகாட்டில் பாடுபவன், நடமாம் இடமாம் - அச்சுடுகாடே அவனுக்கு நடனஞ்செய்கின்ற இடமாம், இகவாத தொழில் - நீங்காத ஐந்தொழில், ஐயம் - பிச்சை எடுத்தல், இல் வாழ்வோர் - இல்லற வாழ்க்கை நடத்துவோர், மலையின் மகவாய ஒரு நீலி - மலையரையன் மகள் ஆகிய ஒரு நீலியும் மறைவுற்ற சலத்தாள் - சடையினுள் மறைவாக வாழும் நீர் வடிவமான கங்கையும் ஆவர்.
மணி ஆரம் மரம் வேயின் மலை பச்சை உடையே என்பதற்கு மாணிக்கமும் முத்தும் மரமும் மூங்கிலும் நிறைந்த மலைபோன்ற யானையின் பசுந்தோல் உடையாம் என்று பொருள் கூறினுமாம்.
“மலைப் பச்சையுடையாம்; இகழ் ஈமம் பாடி நடமாடும் இடமாம்; தொழில் ஐயமாம்; இல்வாழ்வோர் ஒரு நீலியும், மறைவுற்ற சலத்தாளும் ஆவர்; மைந்தன் ஒரு திருடன்; இவையே அவனுக்குள்ள தகுதிகளாம். இவற்றைத் தெரிந்து காதல் ஒழி. என் உரைகேள்; கேட்பின், “யான் பெற்ற இன்பம் நீயும் பெறுவாய்” என்றாள் நற்றாய் என்க.
ஈது என்பது தொகுதி யொருமைச் சொல்.
இவை என்பது பொருள்.
மகவாய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் - சன்னு முனிவரின் மகளாகிய ஒரு நீலிக்குணமுடையாள்; மறைவாகப் புணர்தற்குரிய தீயொழுக்க முடையாள் எனினுமாம்.
“மாமரத்தின்கீழ் வாழ்வாரை நற்குணமுடையவர் என்று மணம்புரிந்துகொள்ள விரும்புகின்ற மகளே. மின்னற்கொடி போன்ற மகளிர்க்கெல்லாம் சிறந்தவளாகிய நீ அவன் உனக்குத் தகுதியுடையவனோ என்பதை நான் கூறுவேன், கேள்.
அவன் உடை யானையின் பசுந்தோல்; பாடி நடமாடும் இடம், இகழத்தக்க சுடுகாடு; தொழில், ஐயமேற்றல்; இல்வாழ்விடம் ஒரு மலையின்கண். சன்னு முனிவன் மகளாகிய நீலி அவன் மறைவில் புணர்வதற்குரிய தீயொழுக்க முடையவள். அவளுக்கு வரத்தால் தோன்றிய மைந்தன் திருடன். இவையெல்லாம் அவனுடைய தகுதிகள். இவற்றைத் தெரிவாயாக. அவனிடத்துக் கொண்ட ஆசையை விடுவாயாக. என் வார்த்தையைக் கேட்பாயாக. கேட்டால் தரைமீது யான் பெற்ற இன்பம் நீ பெறுவாய் என்றாள் நற்றாய் என்க.
இது பழிப்பது போல் புகழ்தல் என்னும் அணிபெற்ற நிந்தாத் துதியாகும்.
வரமைந்தன் - மேலான மகன் (முருகன்), ஒரு மாதின் வழி - வேடர் குலத்தே தோன்றிய வள்ளி என்னும் ஒருத்தியினிடத்து. நின்ற திருடன் - களவொழுக்கம் பூண்டு நிலை பெற்ற திருடனாகும், தகவு ஈது - அச் சிவபெருமானிடத்து நீ விருப்பங் கொள்வதற்கு உரிய தகுதிக் குணம் இவையாம்; தெரி - இவற்றை அறிவாயாக. காதல் - (எனவே, அவனிடத்துக் கொண்ட) ஆசையை, ஒழிவாய் - ஒழித்துவிடு, என் உரை கேள் - நற்றாயாகிய எனது சொல்லைத் தட்டாமல் கேட்பாய், மின் னரசே - மின்னற் கொடிபோன்ற பெண்களுக்குள் தலை சிறந்தவளே! (என் உரையைக் கேட்காமல் விரும்பு வாயானால்) தரைமீது - இப்பூமியில், எந் நல மெய்தி மகிழ்வாய் - என்ன இன்பத்தை அடைந்து மகிழ்ச்சி யுறுவாய்?
மாவாரை மகிழார மணமேவ விழைவாய் எனக் கூட்டினுமாம்.
தெரி காதல் - மேற்கூறிய குடும்பத்தின் மீதுவைத்த ஆசை எனினுமாம். (நீலியும் மறைந்திருப்பவளுமாகிய கங்கையும்) மறைவுற்ற சலத்தாள் - வெளியே காட்டாமல் உள்ளே மறைத்துக் கொண்டிருக்கின்ற கோபமுடையாள்: கோபம், உமையை இடப்பக்கத்தில் அணைத்துக்கொண்டு தன்னைப் பராமுகமாகச் சும்மாடு போலத் தலையில் வைத்துள்ளமை குறித்து ஏற்பட்டது.